பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தமிழ் நாடும் மொழியும்


கிளி, விளரி, தாரம் என்னும் ஏழு சுரங்களும், குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பண் வகைகளும், தோற் கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் என்ற நால்வகை இசைக் கருவிகளும், பேரி யாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் முதலிய யாழ்களும் சங்க காலத்தில் வழக்கில் இருந்தன. இசைக் கலையில் வல்லவராயிருந்த பாணர் , பாடினியர் முதலியவர்களை மக்களும், மன்னரும் பெரிதும் போற்றினர்.

அக்காலத்தில் கோவில்கள் செங்கல், மரம் இவற்றால் கட்டப்பட்டன. சுவர்மேல் கண்ணைக் கவரும் வகையில் சுண்ணம் பூசப் பெற்றிருந்தது. இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனாரது கீழ்வரும் பாடலால் அறியலாம்.

"இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை" (அகம்-167)

சோழர் பெருநகராகிய காவிரிப்பூம்பட்டினத்து மாளிகைகளிலே மக்களை மயக்கும் சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதை,

"சுடுமண் ஒங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம்"

என மணிமேகலை கூறுவதிலிருந்து அறியலாம். மேலும் அக்காலத்தில் மண்ணினும், கல்லினும், மரத்தினும் சுவரினும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.