பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

63


‘புவன கோசம்' (Bhuvanakosa) என்ற நூலிலே சிந்து வெளிப் பல்லவர், தென்னாட்டுப் பல்லவர் என பல்லவர்களை இரு பிரிவாக்குகிறார். மேற் கூறியவற்றிலிருந்து பல்லவர் இந்நாட்டவரே என்று வாதிக்கப்படுகிறது. ஆனால் அறிஞர்கள் இதனை இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. திரு. சீனீவாச அய்யங்கார் பல்லவர் மத்திய இந்தியாவிலுள்ள நாகரோடு தொடர்புடையவர்கள் எனக் கூறியுள்ளார். பல்லவர் தென்னாட்டுக் குறும்பர்களோடு உறவுடையவர் என்பது டாக்டர் சிமித் கூற்று.

பல்லவருடைய பிறப்பிடம் தக்காணம்; அவர்கள் ‘பஹ்லவர்' எனப்படுவர் என்பது சி. வி. வைத்யா என்பவரின் கருத்து. டாக்டர் கிருட்டிணசாமி கூறுவதாவது:- தமிழ்ச் சொல்லாகிய தொண்டை என்பதற்கு வடசொல் பல்லவம். எனவே வடமொழியில் பல்லவர் என அழைக்கப்படுபவர்கள் தமிழ்த்தொண்டையர்களே. தொண்டை மண்டலம் அவர்களது சொந்த நாடாக இருந்திருத்தல் வேண்டும். ஈழநாட்டு அறிஞராகிய சி. இராசநாயகம் கூற்று வருமாறு:- தொண்டை மண்டலத்தின் முதல் அரசன் தொண்டைமான் இளந்திரையன். இவன் மணிமேகலையிற் குறிப்பிடப்படுகிறான். தொண்டைமான் இளந்திரையனின் தந்தை சோழன் கிள்ளிவளவன்; தாய் பீலிவளை என்னும் நாககன்னிகை. இவளது சொந்த நாடு ஈழத்திற்கு அருகில் உள்ள மணிபல்லவம். பிறந்தவுடனே தொண்டைமான் இளந்திரையன் தொண்டைக் கொடியினால் சுற்றப்பட்டுக் கடலில் மிதக்கவிடப்பட்டான். கடல் அலைகளினால் அக்குழந்தை சோழ நாட்டுக் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை வளர்ந்த பின் தொண்டை மண்டலத்திற்கு அரசனானது. எனவே பின்னர் அக்குழந்தையின் பரம்பரையினர் தாய் நாடாகிய மணி பல்லவத்தின் பெயரால் பல்லவர் என அழைக்கப்பட்டனர்.