பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தமிழ் நாடும் மொழியும்


ஆனால் மேற்கூறிய கருத்து பல்லவர் தமிழரசரோடு கொண்ட பகைமைக்குக் காரணம் தெரிவிக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல; பல்லவர் முதலில் தமிழைவிட வடமொழிக்கும், வடநாட்டுப் பண்பாட்டுக்குமே ஊக்கமும், ஆக்கமும் அளித்தனர். தமிழ்ப் புலவர்களால் சோழ பாண்டியரைப் போல் பல்லவர் அவ்வளவாகப் பாடப்படவில்லை. இதிலிருந்து பல்லவர் தமிழ் நாட்டவர் அல்லர் என்பது போதரும். "இத்தனை இடையூறுகளும், பல்லவர் என்போர் ஒரு குல மக்கள் அல்ல; அவர்கள் ஓர் கலப்பினம்; அஃதாவது நாக பார்ப்பனர் பரம்பரை எனக் கொள்ளின் தீர்ந்துபோகும்" என்று பேராசிரியர்? வ. பொன்னுசாமி பிள்ளை எழுதி உள்ளார்.

ஆந்திரப் பேரரசின் தென் மாநிலச் சார்பாளர்களாக (Governor)வும், அலுவலராகவும் இருந்த பல்லவர் ஏறத் தாழ கி. பி. 250-ல் ஆந்திரப் பேரரசு வீழ்ச்சியுற்றகாலை விடுதலை முழக்கம் செய்து தனியரசு அமைத்தனர். இத்தனியரசின் தலைநகர் காஞ்சி; துறைமுகம் கடல்மல்லை; அரசாங்க இலச்சினை நந்தி. அடுத்து பல்லவப் பேரரசர்களைப் பற்றிப் பார்ப்போம்.

முற்காலப் பல்லவர்கள்

பல்லவர் பரம்பரையினைத் தெளிவாகச் சொல்லுதல் அவ்வளவு எளிதன்று. முற்காலப் பல்லவர்களின் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் பெரிதும் பிராகிருத மொழியிலேயே அமைந்துள்ளன. எனவே முற்காலப் பல்லவர்களைப் பிராகிருதப் பல்லவர்கள் என்று அறிஞர் அழைப்பர். மயிதவோலு சாசனம், இரகதகல்லி சாசனம், பிரிட்டிசு மியூசியம் சாசனம் என்ற மூன்றும் முற்காலப் பல்லவரைப்பற்றி விளக்கமாக அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. மேலும் இவைகளே தமிழக வரலாற்றைக் குறிக்கும் முதற் சாசனங்களாகும்.