பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

71


குறைந்த ஆண்டுகள் ஆண்டவன் இவனே. இவன் ஆட்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை.

பரமேசுவரவர்மன் (660-680)

பரமேசுவரவர்மன் காலத்தில் மேலைச் சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான்; பல்லவரை உறையூர் வரை விரட்டியடித்தான். வெற்றிக் களிப்பில் திரும்பி வந்துகொண்டிருக்கையில் திடீரெனப் பல்லவன் பாண்டியர் உதவியோடு சாளுக்கியனைத் தாக்கினான். திடீர்த் தாக்குதலுக்கு ஆளாகிய சாளுக்கியப்படை தோற்றோடியது. இப்போர் பெருவளநல்லூரில் நடைபெற்றது. இதன்பின் பரமேசுவரன் நாட்டின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினான். தன் முன்னோரைப் போலவே இவனும் கட்டடக் கலைஞன். எனவே பல கோவில்களைக் கட்டுவித்தான். அவற்றுள் குறிப்பிடத்தக்கன இரண்டு. ஒன்று காஞ்சிக்கருகிலுள்ள கூரம் கோவில்; மற்றொன்று மாமல்லபுரத்திலுள்ள கணேசர் கோவில்.

இராசசிம்மன் (680-700)

இரண்டாம் நரசிம்மவர்மனே இராசசிம்மன் ஆவான். இவன் பரமேசுவரனின் மகன். இருபது ஆண்டுகளுக்கு மேல் இவன் அமைதிமிக்க ஆட்சி செலுத்தினான். காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோவிலையும், மாமல்லபுரக் கடற்கரைக் கோவிலையும் கட்டியவன் இவனே. இவன்றன் மனைவியான அரங்கபதிகை என்பவளும் இவன் போலவே கட்டடக் கலையில் பெருவிருப்புள்ளவள். இக்காலத்தில்தான் காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அகம்பிரியா, சங்கரபக்தா, வாத்ய வித்யாதரா என்பன இராச சிம்மனின் விருதுப் பெயர்களாகும், இவன் அவையில்