பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தமிழ் நாடும் மொழியும்


தான் தண்டி என்னும் வடமொழிப் புலவர் வீற்றிருந்தார். இவனுக்குப் பிறகு இவன் மகனான இரண்டாம் பரமேசுவரன் மன்னனானான். இவன் கி. பி. 700லிருந்து 710 வரை ஆட்சி புரிந்தான். ஆனால் 710-ல் திடீரென எந்தவித வாரிசும் இல்லாமல் பரமேசுவரன் இறந்தான். எனவே அதன்பின் குழப்பம் ஏற்பட்டது. பட்டத்திற்குப் பல இளவரசர்கள் போட்டியிட்டனர். சித்திரமாயன் என்பவன் அவர்களுள் ஒருவன். மற்றொருவன் நந்திவர்மன். நந்திவர்மனின் முன்னோன் பீமவர்மன். பீமவர்மன் என்பவன் சிம்மவிட்டுணுவின் தம்பி. இவன் தெலுங்கு நாட்டை ஆண்டவன். நந்திவர்மன் தனது தந்தையாகிய இரணியவர்மன் உதவியுடன் பல்லவ நாட்டின் மன்னனானான். அக்காலை இவன் பல்லவமல்லன், போத்தரையன் என்னும் பட்டங்களைப் புனைந்துகொண்டான். இவன் அரசனானபொழுது மிகவும் இளைஞனாக இருந்தான். இவன்றன் ஆட்சிக்காலம் கி. பி. 710-775 ஆகும். காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலிற் காணப்படும் சிற்பம், அவன் வெளியிட்ட காசக்குடி பட்டயம் இவற்றின் மூலம் நந்திவர்மன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னன் எனத் தெரிகிறது.

மறுபடியும் மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படை எடுத்தான். கி.பி. 733 ல் அவன் காஞ்சி மீது படை எடுத்து நந்திவர்மனை ஓட்டி, சித்திரமாயனை மன்னனாக்கினான். வென்ற சாளுக்கியன் காஞ்சிக் கோவில்களுக்குப் பல பரிசுகள் அன்பளிப்பாக அளித்தான். இக்காலை நந்திவர்மன் திடீரெனக் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நந்திபுரம் என்னும் ஊரிலிருந்து வந்து, உதயச்சந்திரன் என்னும் தன் படைத்தலைவன் உதவியுடன் சாளுக்கியனை வென்றான். சாளுக்கியனோடு சேர்ந்த பாண்டிய இராசசிம்மனையும் அடக்கினான். சித்திரமாயன்