பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தமிழ் நாடும் மொழியும்


தந்தைக்குப்பின் அரசுகட்டிலில் ஏறும் உரிமை மூத்த மகனுக்குத்தான் உண்டு. அரசன் பிள்ளை இன்றி இறந்தால், மக்களும் மதிஅமைச்சரும் ஒன்றுகூடி அரச மரபைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்து எடுத்து அரசராக்குவர். பல்லவ மன்னர்கள் அனைவரும் தங்கள் வீரச்செயல்களுக்கு ஏற்ப விருதுப் பெயர்களை வைத்துக்கொண்டனர். நந்தி இலச்சினை பல்லவரது அரச இலச்சினையாகும். அமைச்சரும் பலதுறை அரசாங்க அலுவலரும் அரசன் நன்கு ஆட்சிபுரிவதற்குப் பல்வகையானும் உதவினர். உட்படுகருமத் தலைவர், வாயில் கேட்போர், கீழ்வாயில் கேட்போர் போன்ற அரசாங்க அலுவலர் அரசனுக்குத் தூண்போன்றோராவர்.

காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, கடற்படை இவை அனைத்தும் பல்லவரிடம் இருந்தன. கடற்படை வலிமை மிக்கதாய் விளங்கியது. எனவே பல்லவர் ஈழநாட்டை வெற்றிபெற முடிந்தது. கடல் வணிகத்தையும் வளம்பெறச் செய்தனர்.

ஊர்தோறும் நீதிமன்றங்கள் திறம்படச் செயலாற்றின. பல்லவர் தலை நகரில் விளங்கிய உயர்நீதிமன்றம் 'அதிகரணம்' என்று அழைக்கப்பட்டது. சிற்றூரில் விளங்கிய அறங்கூறவையம் 'கரணம்' என்று வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றம் 'தருமாசனம்' என்று கூறப்பட்டது. நீதிபதி ' அதிகாரி' எனப்பட்டார். பட்டயங்களை எழுதுபவர் 'காரணிகர்' என்று கூறப்பட்டார்.

சங்ககாலத்திலேயே கிராம மன்றங்கள் விளங்கின போதிலும், கிராம ஆட்சிமுறை பல்லவர் காலத்திலேதான் நன்கு வலுப்பெற்றது. இதற்குப் பல பல்லவர் கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. கிராம ஆட்சியினை ஊரவையார் திறம்பட நடத்தினர். இவர்களே நிலவரி வசூலித்தனர்; வழக்குகளை விசாரித்து நீதி வழங்கினர்; ஊர் நிலம், தோட்