பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

79


யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர், காஞ்சியில் வடமொழிக் கல்லூரி ஒன்று சிறந்து விளங்கியதென்றும், அதற்கும் நாளந்தாக் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததென்றும், காஞ்சியில் அதுகால் புத்த சமயக்கல்வி செழித்திருந்த காரணத்தால் இலங்கையிலிருந்து பல பௌத்த முனிவர் இங்கு வந்து கல்வி பயின்று சிறந்த அறிஞராய் விளங்கினர் என்றும் எழுதி உள்ளார். இத்தகைய சிறப்புமிக்க காஞ்சி இன்று இந்தியாவின் ஏழு புண்ணிய நகரங்களில் ஒன்றாய்வைத்து எண்ணப்படுகிறது. இங்குள்ள ஏகாம்பரநாதர் கோவிலும், வரதராசப்பெருமாள் கோவிலும் மிகப் புகழ் வாய்ந்தனவாகும்.

கடிகாசலம், பாகூர் இவ்விரண்டிடங்களிலும் விளங்கிய வடமொழிக் கல்லூரிகளில் முறையே நான்கு வேதங்களும், பதினான்கு கலைகளும் கற்பிக்கப்பட்டன. மேலும் பாகூர் கல்லூரியில் பதினெட்டுவகை வித்தைகளும், மறைகள், சாத்திரங்கள், புராணங்கள் முதலியனவும் சொல்லித்தரப்பட்டன.

பல்லவர் காலத்திலே சைவமும் வைணவமும் நன்கு வளர்க்கப்பட்டன. மகேந்திரன் அரசாட்சியின் தொடக்கத்தில் சமண சமயம் செல்வாக்குப் பெற்றபோதிலும், சைவ சமயக் குரவர்களான அப்பர், சம்பந்தர் ஆகியோரின் ஓயாத உழைப்பாலும், அவர் தம் பாக்களின் செல்வாக்காலும் சமணமும் பௌத்தமும் நிலை தடுமாறின. சங்ககாலத்திலே அரும்பிய சைவ வைணவ சமயங்கள் பிற்காலப் பல்லவர் காலத்திலே (கி. பி. 700-900) ஓங்கிய மரங்களாகச் செழித்துச் சீரும் சிறப்பும் கொண்டுவிளங்கின. மன்னன் ஆதரவும், மக்களின் பக்கபலமும் சேரச்சேர, காற்றொடு சேர்ந்த கனலெனச் சைவ வைணவ சமயங்கள் தமிழ்நாடு முழுதும் பரவலாயின.