பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டாம் அச்சுக்கான பதிப்புரை

யில் அமைந்துள்ள ‘நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்’ வெளியிட்டுள்ளது. நாவா அவர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் எனது முயற்சிகளில் கிடைத்த சில விவரங்களும் இந்த நூலடைவில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றாலும், இவை இன்னும் முழுமைப்படுத்தப் படவேண்டும். ஆனால், இதன்வழி தொகுப்பு நூல்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது—முதல் அடி எடுத்துவைக்கப்பட்டுள்ளது என்று உறுதியாகக் கொள்ள முடியும்.

இந்தத் தொகுப்புப் பணிகள் தொடர்ந்து நடந்தாலும், நாவா அவர்களின் சில நூல்களை இன்றைய ஆய்வாளர்களின் உடனடிப் பார்வைக்காக மீண்டும் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

அந்த அளவில், இந்த மறுஅச்சுப் பணிகளை விரைவுபடுத்த மக்கள் வெளியீடு உரிமையாளர் ரா. வசந்தா அவர்கள் முழுமையாக ஏற்பளித்துள்ளார். நாங்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாக மட்டுமன்றி, ஆய்வுத்துணையாகவும் அமைந்திருக்கிறோம் என்பதையும் இங்குக் குறிப்பிடவேண்டும்.

மக்கள் வெளியீட்டின் வழக்கமான நோக்கங்களுடனும், அண்மைக் கால வழக்கத்துக்கு முற்றிலும் மாறான விரைவுடனும் இனிப் பணிகள் செழுமைபறும் என உறுதிகூறுகின்றோம்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள இரண்டு கட்டுரைகளும் இன்றைய நிலைமைகளில் சாதிகள் பற்றிய அடிப்படையான புரிதல்களுக்குத் துணையாகும் என்பதில் ஐயமில்லை. தங்களது உண்மையான விடுதலைக்குயாரைத் தம்முடன் இணைத்துக் கொள்ளவேண்டும், யாருடன் முரண்பட்டு நிற்கவேண்டும் என்பதைத் தொடர்புடைய அனைவரும் தெரிந்துகொண்டால், சமூக-பொருளாதார மாற்றங்களுக்கான போராட்ட முனை கூர்மையடையும்.

இணைந்து நிற்கவேண்டியவர்கள், பிணக்குக் கொண்டிருப்பதால், இழப்புகள் இரு சாராருக்குமே. இத்தகைய சூழல்களைத் திட்டமிட்டுச் சில தன்னலக் குழுக்கள் உருவாக்கி வருவதையும் நினைவில் கொள்ளவேண்டும், இவற்றின் பின்னணியினைக் கொள்கை அளவில் மிக நுணுக்கமாக தெளிவாக நாவா அவர்கள் விளக்கியுள்ளார்கள். இன்றைய தமிழகத்தின் உண்மைகளை அப்படியே மனதில் வைத்து எழுதப்பட்டது போன்றே இவை அமைந்துள்ளமையும் நோக்கத்தக்கது.

27-02-1999 மே.து.ரா.