பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ் நாட்டில்
சாதி சமத்துவப் போராட்டக்
கருத்துக்கள்

தமிழ் நாட்டின் சமூக வளர்ச்சியில் தொழிற் பிரிவினையால் தொழிலடிப்படைச் சாதிகள் தோன்றின. அவை பரம்பரைத் தொழில் முறையால் சாதிகளாயின. இவற்றைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில், முன்னரே வடநாட்டில் தோன்றிய வருணாச்சிரமப் பிரிவுகளுக்குள் அடக்க உயர்ந்த வர்க்கங்கள் முயன்றன. ஆனால், இதுவோர் மேற்பூச்சாக (super imposition) இருந்ததேயன்றிச் சாதிகள் தொழிலடிப் படையிலேயே இருந்தன. ஆனால் தொழில் புரியும் வர்க்கங் களிடையே சமத்துவமில்லை.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

தொழில் செய்யாத சுரண்டல் வர்க்கத்தினர் இவர்களிடையே சாதி உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துத் தங்களை உயர்ந்தோரென்றும் உழைப்பாளிகளைத் தாழ்ந்தவரென்றும் கருதினர். தொழில் செய்வோர் ஒன்றுபடாமல் தடுத்து வைத்திருந்தனர். உயர்ந்த சாதியர்களின் நீதி நூல்களும் இதையே நிலைநாட்டின.
சாதிக் கொடுமைகளும் அநீதிகளும் சாதிக் கருவமும் மிகுந்திருந்த காலத்தில் அடக்கப்பட்டிருந்த சாதியினர் அவற்றை எதிர்த்துப் பல்வேறு விதங்களில் போராடியுள்ளனர். இப் போராட்டங்களில் சாதி உயர்வு தாழ்வுகளை நிலைநாட்டப் பயன்படும் கருத்துக்களையும் தத்துவங்களையும் எதிர்த்துப் பல கருத்துக்களையும் தத்துவங்களையும் உருவாக்கினர்.
இக்கருத்துக்களில் சில பழைமையான வேத நூல்களிலிருந்து எடுத்து மாற்றியமைக்கப்பட்டன. சில கருத்துக்கள் வர லாற்றின் மாறுதலுக்கேற்பப் புதுமையாகப்படைக்கப்பட்டன.
இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாதி சமத்துவத்தை விளக்கும் பல நூல்கள் தோன்றின. சாதி அமைப்பு முறையில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களைப் பற்றி இவை எழுதப்பட்டன.