பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்


இதன் பின்னர் 1535-37இல் பரதவர் கிறிஸ்தவரானதும் போர்த்துக்கீசியர் உதவி பெற்று முத்துச் சலாபம் நடத்தியதும் அவர்கள் உதவியால் தங்களுக்குள் ஒரு சாதித் தலைவரை ஏற்படுத்திக்கொண்டு, அவரையே பரத பாண்டியர் என்னும் பெயரோடு ஆளுகையற்ற அரசராகக் கொண்டதும் அவரது வம்ச பரம்பரை விவரங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் பரதவர் சாதிச் சிறப்புக்கு அவர்கள் செல்வர்களது சிறப்பே காரணம் என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது.

கார்காத்தார் சாதி உயர்வு கூறும் ‘கிளைவளப்ப மாலை’யும் கார்காத்தார் தோற்றத்திற்குரிய புதுப் புராணக் கதைகளைக் கூறி, கடந்த 400 ஆண்டுகளில் அவர்கள் குலத்தவரில் மேன்மை பெற்று விளங்கிய வட மலையப்ப பிள்ளையன் போன்றவர்களின் வரலாறுகளையும் சொல்லுகிறது.

பள்ளர்கள் தம்மை இந்திரகுல வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் இந்திரலோகத்தில் இருந்து நெல்லும் கரும்பும் கொண்டு வந்தவர்கள் என்றும் இதனால் பாண்டிய மன்னனால் சிங்காதனத்திலிருத்திப் பாராட்டப்பட்டவர்களென்றும் அவர்களுடைய சாதி வரலாறுகள் கூறுகின்றன.13

இக்கதைகளுக்கெல்லாம் பொதுவான சில அம்சங்கள் உள்ளன. அவற்றைச் சற்றுக் கூர்ந்து நோக்குவோம்.

இந்நூல்கள் யாவும் அவ்வச்சாதியில் செல்வமுடையவர்களால்தான் எழுதுவிக்கப்பட்டன. எனவே, அவர்கள் தங்களுக்கு ஓர் உயர்வான தோற்றுவாயைப் பண்டைக் கால நூல்களில் காண முயன்றார்கள். அல்லது அவற்றோடு தொடர்பு கொள்ளும் முறையில் புதிய நூல்களை எழுதி உயர்வை ஏற்படுத்த முயன்றார்கள்.

நில உடைமையாளர்கள் மிகுதியாயிருந்த சாதிகள், ஆரிய வேதம் வேறு என்றும் திராவிட வேதம் வேறு என்றும் கூறித் தங்களுக்குத் திராவிட வேதத்தில் உயர்ந்த பதவியிருப்பதாக நிலைநாட்ட முயன்றன. தாங்கள் சுகவாழ்க்கை வாழ்வதற்காக உழைப்பதற்குத் தொழிலாளிகள் தேவையாதலால் வருணா சிரம முறையையும் ஒப்புக்கொண்டு, தங்களை வைசியர் எனவும் தொழில் செய்து வாழ்வோரைச் சூத்திரர் எனவும் அவர்கள் தங்களிலும் தாழ்த்தவர்கள் என்றும் எழுதினார்கள். ஆனால் மேலுள்ளவர்களுக்குத் தாங்கள் சமம் என்று காட்ட வைசியன் ஆட்சிக்கு வரலாம் என்று கூறும் கருத்துக்களைப் பிற்கால வட மொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டினார்கள்.

நாடார்கள் பழைய புராணங்களிலிருந்து தங்கள் சாதியின் உயர்வைக் காட்ட ஆதாரம் எதுவும் கிடைக்காததால் தமிழ்