பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

17


இத்தகைய சாதி சமத்துவப் போராட்டத்திற்காக எழுதப் பட்ட ஒரு நூல் அண்மையில் எனக்குக் கிடைத்தது. இதன் தலைப்பு ‘சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு’15 என்பது, இந்நூலில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி ‘பஞ்சாங்கம் குண்டையனுக்கும் மார்க்கசகாயம் ஆசாரிக்கும் நடந்த சம்வாதம்’. இரண்டாம் பகுதி ‘மார்க்கசகாயம் ஆசாரி முதலிய வாதிகளுக்கும் குண்டையன் முதலிய பிரதிவாதிகளுக்கும், சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வாதிகளது வாக்குமூலமும் நீதிபதி அளித்த தீர்ப்பும்.’

‘விசுவப் பிரம்மகுலம்’ என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஆசாரிமார், பஞ்ச கருமிகள் என்போர் நெடுங்காலமாகச் சாதி ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்கள். சோழர் காலத்தில் “பஞ்சகருமார்களோடு வலங்கை சாதியார் உடன் கூட்டம் கூடாது” என்று முடிவு செய்ததாகப் பல சாசனங்கள் கூறுகின்றன.19 ‘உடன் கூட்டம்’ என்றால் ஒரே தெருவில் வசிப்பது, விழாக்களில் கலந்துகொள்ளுவது, ஊர்க் கூட்டங்களில் பங்கு கொள்ளுவது முதலியன. தற்காலத்தில் ‘சாதி விலக்கு’ என்பதுபோல இத்தண்டனை ‘ஊர்விலக்கு’ ஆகும். பஞ்சகருமார் இடங்கைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் தொழிலாளிகள். இவர்களுக்கு நிலச்சுவான்கள் செய்த அநீதிகளைப் பற்றி ஒரு சாசனம் கூறுகிறது, இடங்கைச் சாதிகள் தொண்ணுற்றாறும் ஒன்று சேர்ந்து நின்று இந்த அநீதிகளை எதிர்க்கத் தீர்மானித்ததாக அதே சாசனம் கூறும்.20 தொடர்ந்து இத்தொழிலாளிகள் உயர்ந்த சாதியினரின் கொடுமைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவ்வரலாற்றை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று.

பஞ்சகருமார் என்பவர்கள், இரும்புத் தொழில் (கொல்லர்), தச்சுத் தொழில் (தச்சர்), கல் தொழில் (கல் தச்சர்), செம்புத் தொழில் (கன்னார்), தங்கத் தொழில் (தட்டார்) என்று ஐந்து தொழில்களைச் செய்பவர்கள். ஆனால் இவர்கள் கொள்வினை கொடுப்பு வினையும் கூடியுண்ணும் உரிமைகளும் உடைய ஒரே சாதியினர். இவர்கள் தனித்தனித் தொழில் செய்து வாழ்ந்து வந்தனர். கொல்லர்கள் ஏர்முனையும் வாள் முனையும் கதிர் முனையும் எழுத்தாணி முனையும் செய்து உழவர்களுக்கும் வீரர்களுக்கும் படிப்பாளிகளுக்கும் கருவிகள் வழங்கி உதவினர். தச்சர்கள் மரச்சாமான்களும் வீடு கட்டுவதற்குரிய மரப் பொருள்களும் செய்து எல்லாச் சாதியினருக்கும் உதவி புரிந்தனர். சிற்பாசாரிகள் அல்லது கல் தச்சன் அல்லது ஸ்தபதி, மாளிகைகள், கோயில்கள் கட்டிக் கலையை வளர்த்தனர். பொற்கொல்லர்கள் ஆபரணங்களும் நாணயங்களும் மாங்கல்

36/2