பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

41

தெளிவாக்குகின்றன. இப்போராட்டங்களின் இறுதியில் முதற் குலோத்துங்கன், வாணிகர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சுங்க வரியை நீக்கியதால் சுங்கம் தவிர்த்த பிரான்’ என்ற அடைமொழியால் கலிங்கத்துப் பரணியிலும் மெய்க் கீர்த்திகளிலும் அழைக்கப்படுகின்றான். இடங்கைச் சாதி களுக்கும் அவ்வப்போது சில சலுகைகள் கிடைத்துள்ளன."

இச்சமூக உண்மையைத்தான் கதை வேறு விதமாகத் தங்களுக்கு ஆதரவான முறையில் கூறுகிறது. எனவே வலங்கை, இடங்கைப் பிரிவுகள் சமூக வளர்ச்சி வரலாற்றில் நிலவுடைமையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் தங்கள் நலன் களுக்குகந்த முறையில் மக்களைத் தங்கள் பக்கம் திரட்டிக் கொள்ள ஏற்படுத்திக்கொண்ட பிரிவுகளே.

தங்களை ஆதரித்த பிரிவுகளை நிலக்கிழார்களாகிய வேளாளர்கள் வலங்கையர் என்று அழைக்கிறார்கள். ஆனால், தாங்கள் அப்பிரிவைச் சேர்ந்தவர்களல்லர் என்றும் சொல்லுகிறார்கள். தங்களுக்காகப் போரிட்ட வலங்கைச் சாதிகளில் தாங்களும் ஒன்று என்று அவர்களால் ஒப்புக் கொள்ள முடியவில்லை; ஏன்? அவர்களை ஆதரித்தவர்களில் பறையர், குறவர் போன்ற சாதியர்களும் இருந்தார்கள். பிராமணர்கள் எப்பிரிவையும் சேராதவர்கள். அவர்களைப் போலவே தாங்களும் உயர்ந்தவர்கள் என்று கூறுவதற்காகவும் கீழ்சாதிப் பிரிவுகளும் உள்ளடங்கிய ஒரு கூட்டமைப்பில் தாங்களும் ஒர் அங்கம் என்று பிறர் கருதுவதற்கு இடம் கொடாமல் இருப்பதற்குமே இவ்வாறு கூறினர். உண்மையில் வலங்கைப் பிரிவில் இவர்களது சாதிகளும் உண்டு.

வேளாளர்களும் பிராமணர்களும் தங்கள் சாதிகளது உயர்வைக் காட்டும் சான்றுகளைச் சேகரித்துக் கதைகள் எழுதினார்கள். ஆனால் அதே சமயத்தில் இடங்கை, வலங்கை இரு வகுப்பினரையும் சேர்ந்தவர்கள் தங்களுக்குக் கீழ்ப்பட்ட வர்களே என்று இக்கதைகளில் எழுதினார்கள். எடுத்துக் காட்டாக வேளாளர்களைக் கங்கையின் புத்திரரென்றும் நாடார்களைச் சத்தி முனியின் புத்திரரென்றும் இடங்கை வகுப் பினர் கச்சியப முனிவர் தென்னாட்டுக்கு வந்தபோது, அவரது ஓம குண்டத்தில் தோன்றி அவருடைய செருப்புகளைத் தாங்கிக்கொண்டு வந்தவர்களென்றும் எழுதிவைத்தார்கள்.28

நிலக்கிழார்களுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு ஆதரவாக வும் பிராமணர்கள் புனைந்து எழுதிய கருத்துக்களை மனதிற் கொண்டுதான் வலங்கை, இடங்கைப் பிரிவினையைப் பிராம ணர்கள் ஏற்படுத்தினார்கள் என்று மா.ச. ஆசாரியார் சொல்லுகிறார்.