பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழ் மன்னரும் சாதிப் பிரிவினைகளும்

கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டயங்களிலும் காணப்பட்ட சான்றுகளின் அடிப்படையிலேயே, சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் தமது தீர்ப்பால் இம்முடிவுக்கு வந்திருக்கிறார். இந்தச் சான்றுகளனைத்தும் நிலமுடையவர்களையும் நிலத்தில் பயிர் செய்யும் வகுப்பினரையும் அவர்களுக்கு ஊழியம் செய்யும் வகுப்பினரையும் குறிப்பிடுவதைக் காணலாம்.

இடங்கைப் பிரிவில் அடங்கியுள்ள சாதியில் தொண்ணுாற்றாறு என்றும் தொண்ணுற்றெட்டு என்றும் நிகழ்ச்சிகள் குறிப்பிடுகின்றன. வீரராசேந்திர சோழனது திருவெண்காட்டுக் கல்வெட்டு ஒன்று இடங்கைச் சாதியினரிடமிருந்து, மன்னன் கொண்ட வரியைக் கோயிலுக்கு அளித்ததாகக் கூறுகிறது. அக்கல்வெட்டில் இடங்கைப் பிரிவில் அடங்கியுள்ள சாதிகள் சிலவற்றின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றைக் கவனிக்கும்பொழுது, அவை வணிகம் செய்வோரையும் தச்சன், கருமான் போன்ற தொழிலாளரையும் குறிப்பிடுகின்றன. தர்ஸ்டன் என்னும் ஆராய்ச்சியாளர் கீழ்வரும் சாதிகளை இடங்கைச் சாதிகளென்று குறிப்பிடுகிறார். அவைகளாவன: செட்டி, வாணியன், தேவாங்கன், கொத்தன், தட்டான், கன்னான், கொல்லன், சக்கிலியன் முதலானவையாகும்.

மூன்றுகை மகா சேனையைப் பற்றி இத்தகைய விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. சாதிப் பிரிவுகளோடு அப்படைக்குத் தொடர்பு இருந்திருக்கும் என்று எண்ணுவதற்குச் சான்றுகள் இல்லை. இடங்கை, வலங்கை இவ்விரண்டு பிரிவிலும் அடங்காது மூன்றாம் பிரிவினர் ஆகிய அனைவரையும் கொண்ட மன்னனது நிலைப்படையாக இதனைக் கருதலாம்.

ஆகவே, இக்கட்டுரையில் சாதிகளோடு தொடர்புடைய வலங்கை, இடங்கைப் பிரிவுகளுக்கும் மன்னர் ஆட்சிக்கும் இடையே இருந்த தொடர்புகளை மட்டும் விளக்குவோம். அதுவே மேற்குறித்த வினாக்களுக்கு விடையுமாகும்.

சோழர் ஆட்சி, முக்கியமாக நிலவுடைமைச் சுரண்டலை அடித்தளமாகக் கொண்டு நிலைத்திருந்தது என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம்.[1] இச்சுரண்டலை நிலைநிறுத்திக் கொள்ள அவர்கள் உள்நாட்டில் ஒரு சமூகத் தளத்தை நிறுவிக்-

  1. தாமரை மலர் 2 இதழ் 5 (ஏப்ரல் 1960இல் ‘சோழர் ஆட்சியில் அறப்போர்கள்’ என்ற தலைப்பில் தாம் எழுதிய கட்டுரையைப் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் இங்குக் குறிப்பிடுகிறார். -பொதுப் பதிப்பாசிரியர்