பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழ் மன்னரும் சாதிப் பிரிவினைகளும்

நாயனார் திருக்கோயிலில் இடங்கை உள்ளது சகலரும் நிறைவுற நிறைத்துக் குறைவறக்கூடி கல்வெட்டில் வெளியாவது; பல மண்டலங்களிலும், பிராமணரும், சித்திர மெழிப் பெரிய நாட்டார், யாதவர், கொல்லத் தலைவரான மலையமான்களும், காயாங்குடி கண்ணுடை அந்தணரும் பரவர் குலபதபவண நாட்டாரும் பதிணெண்விஷயத்தில், பாணியங்களும் பொற்கோயில் கைக்கோணரும், இடங்கை சகலர்களும் ஒருவருக்கு வந்த நன்மை தீமை அனைவரும் அதாகவும், விலங்கினோமாகில், மாறு சாதிக்கும், கீழ்சாதிக்கும் தாழ்வு செய்தோம் ஆவோம்.

இதற்குப் பின் இக்கல்வெட்டு இம்முடிவுக்கு விரோதமாகப் போகிறவர்கள் கோவிலுக்குச் செலுத்த வேண்டிய அபராதத்தை வரையறுத்துச் சொல்கிறது.

இக்கல்வெட்டு இடங்கை வகுப்பினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கூறுவதோடு வலங்கை வகுப்பைச் சேர்ந்த பெரிய நாட்டார், யாதவர், பரவர் முதலியவர்களும் ஒன்று சேர்ந்து தீமைகளை எதிர்க்க வேண்டுமெனவும் நன்மைகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமெனவும் கூறுகிறது. இடங்கை வகுப்பினருக்கும் மற்றும் இக்கல்வெட்டில் கண்ட வேறு சாதியினருக்கும், ஒருவருக்கு வந்த நன்மை தீமைகள் எல்லோருக்கும் வந்ததாகக் கருதவேண்டும் என்று உறுதியை இக்கல்வெட்டின் மூலம் சாதாரண மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசர்கள் இருவகைச் சாதிப் பிரிவுகளையும் முட்டி மோதவிட்டுத் தங்கள் சுரண்டலை நீடிக்கச் செய்த முயற்சிகள் பன்முறை வெற்றி பெற்றன. பலவித இன்னல்களைப் பொதுவில் அனுபவித்த பிறகு, வலங்கைப் பிரிவில் உழைக்கும் சாதியினரும், தீமையை எதிர்க்கவும் நன்மையை வரவேற்கவும் ஒன்றுபடுவோம் என்று உறுதி செய்துகொண்டதைக் குறிக்கும் இக்கல்வெட்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

அபூர்வமாகக் கிடைக்கும் இச்சான்றுகளின் மூலம், இடங்கை-வலங்கைக் கலகங்கள் வெறும் சாதிக் கலகங்கள் அல்லவென்றும், வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் முரண்பட்ட நிலவுடைமை வர்க்கமும் வணிக வர்க்கமும் தம்மோடு இணைத்துக் கொண்ட மக்கட் பிரிவுகளின் கூட்டமைப்புகளே என்றும் முடிவுக்கு வரலாம். இவ்வமைப்புகளில், அடித்தட்டிலுள்ள உழைக்கும் மக்கள் இடங்கை, வலங்கை அமைப்பை விட்டு விலகி நன்மை தீமைகளில் ஒன்றுபட்டு நிற்கச் செய்த முயற்சியும் நமக்குப் புலனாகிறது.