உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

பண்ணாங்குழி

99

உலக வாழ்க்கையிலுள்ள ஏற்றிறக்கம் இவ்விளையாட்டால் உணர்த்தப்படுவது, கவனிக்கத்தக்கது.

IV. அசோகவனத் தாட்டம்

ஆட்டின் பெயர் : ஒருவர் தமித்திருக்கும்போது தாமாய் ஆடிக்கொள்ளும் பண்ணாங்குழியாட்டுவகை, அசோக வனத்தில் தனித்திருந்ததாகச் சொல்லப்படும் சீதையொடு தொடர்புபடுத்தி, அசோகவனத் தாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஆடு கருவி : கட்டுக் கட்டற்குரியவையே இதற்கும்.

ஆடு முறை : இருகுழி வரிசையுள்ளும், மேல்வரிசையில், முறையே ஒன்றும் இரண்டும் மூன்றும் நான்கும் ஐந்தும் ஆறும் ஏழுமாக மேன்மேலேற்ற முறையிலும், கீழ்வரிசையில், முறையே ஏழும் ஆறும் ஐந்தும் நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றுமாக மேன்மேலிறக்க முறையிலும், இடவலமாகக் காய்களைப் போட்டுக்கொள்ள வேண்டும். இங்ஙனமன்றி, மேல் வரிசையில் மேன்மேலிறக்க முறையிலும் கீழ்வரிசையில் மேன்மேலேற்ற முறையிலும் போட்டுக்கொள்ளலாம். எங்ஙனமாயினும், இருவரிசையிலும் ஏற்றிறக்க முறை மாறியிருத்தல் வேண்டுமென்பதே விதியாம்.

தொடங்கும்போது கீழ் வரிசையிலுள்ள பெருந்தொகைக் குழியினின்று (அதாவது 7 காய்கள் உள்ள குழியினின்று) தொடங்கல் வேண்டும். காய்களைக் குழிக்கொன்றாகப் போட்டுச் செல்லும்போது, பிறவகை யாட்டுக்களிற் போன்றே கீழ்வரிசையில் இடவலமாகவும் மேல் வரிசையில் வலஇடமாகவும் போட்டுச் செல்லவேண்டும். காய்களைப் போட்டு முடிந்தபின், கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த பெருந்தொகைக் குழியினின்று காய்களை எடுத்தாடவேண்டும். அது கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்தேயிருக்கும்.