௩. கம்ப விளையாட்டு
நால்வர், ஒரு மண்டபத்தின் அல்லது சதுர இடக்தின் நான்கு மூலைக் கம்பத்திலும், கம்பத்திற்கொருவராக நின்றுகொண்டு, எதிரும் வலமும் அல்லது எதிரும் இடமுமாக, மாறி மாறி அல்லது சுற்றிச்சுற்றி வேறுவேறு கம்பத்திற்கு இயங்கிக்கொண்டிருக்க, இன்னொருவர் அவரைத் தொடல்வேண்டும். முன்னரே ஏதேனுமொருவகையில் தோற்றவர் அல்லது தவறியவர் தொடவேண்டியவராவர்.
ஒருவர் கம்பத்தைவிட்டு விலகியிருக்கும்போதும், ஏற்கெனவே ஆளுள்ள இன்னொரு கம்பத்தைச் சேர்ந்திருக்கும்போதும், அவரைத் தொடலாம். தொடப்பட்டவர் தொட்டவர் வினையையும், தொட்டவர் தொடப்பட்டவர் வினையையும், மேற்கொள்ள வேண்டும்.
கொடுகிறவர், பால் மோர் தயிர் விற்பவர்போல், “பாலோ பால்!” அல்லது “மோரோ மோர்!” அல்லது “தயிரோ தயிர்!” என்று சொல்லிக்கொண்டு திரிவது, சோழ கொங்கு நாட்டு வழக்கும், உச்சந்தலையைக் கையால் தட்டிக்கொண்டு “தொண்டான் தொண்டான் தொடுபிடி தொண்டான்” என்று சொல்லித் திரிவது, பாண்டிநாட்டு வழக்கும் ஆகும். பாண்டிநாட்டில் இவ்விளையாட்டிற்குத் “தொண்டான் தொண்டான் தொடுபிடி தொண்டான்” என்றே பெயர்.
தீட்டுள்ள அல்லது தீண்டப்படாத ஒருவர் தம்மினின்று விலகியோடிய பிறரை, விளையாட்டிற்கோ குறும்பிற்கோ தொட்ட செயலை, நடித்துக் காட்டுவதாகவுள்ளது இவ்விளையாட்டு.