௫. அரசனுந் தோட்டமும்
அரசனும் சேவகனும் தோட்டக்காரனும் தோட்டமும் (அதாவது பூசணிக்கொடிகளும்) என ஆடுவார் முதலாவது பிரிந்துகொள்வர்.
அரசன் சற்று எட்டத்திலிருந்து கொண்டு, பூசணித்தோட்டம் போடும்படி சேவகன்வழித் தோட்டக்காரனை ஏவுவன். தோட்டக்காரன் வேலை தொடங்குவன்.
அரசன் அடிக்கடி தன் சேவகனை ஏவித் தோட்டத்தின் நிலைமையைப் பார்த்துவிட்டு வரச் சொல்வன். சேவகன் வந்து கேட்கும் ஒவ்வொரு தடவையும், முறையே, ஒவ்வொரு பயிர்த்தொழில் வினை நிகழ்ந்துள்ளதாகத் தோட்டக்காரன் சொல்வான். இங்ஙனம் உழுதல், விதைத்தல், நீர்பாய்ச்சல், முளைத்தல்,ஓரிலை முதற்பல இலைவரை விடல், கொடியோடல், களையெடுத்தல், பூப்பூத்தல், பிஞ்சுவிடல், காய் ஆதல், முற்றுதல் ஆகியபல வினைகளும் சொல்லப்படும். உழுதல் முதற் காய் ஆதல் வரை ஒவ்வொரு வினையைச் சொல்லும்போதும், தோட்டத்தை நிகர்க்கும் பிள்ளைகள் அவ்வவ் வினையைக் கையால் நடித்துக் காட்டுவர்.
காய்கள் முற்றியதைச் சொல்லுமுன், தோட்டக்காரன் காய்களைத் தட்டிப்பார்ப்பதுபோல் ஒவ்வொரு பிள்ளையின் தலையையும் குட்டி “முற்றிவிட்டதா ?” என்று தன்னைத்தானே கேட்டு, சில தலைகளை “முற்றிவிட்டது” என்றும், சில தலைகளை “முற்றவில்லை” என்றும், சொல்லி; முற்றிவிட்டதென்று சொன்ன பிள்ளைகளை வேறாக வைப்பான். காய் கொண்டுவரும்படி அரசனால் ஏவப்பட்ட சேவகன் சில காய்களைக் கொண்டுபோய்த் தன் வீட்டில் வைத்திருப்பதுபோல், சில பிள்ளைகளைக் கொண்டுபோய்ச் சற்றுத் தொலைவில் வைத்திருப்பான். அக்காய்கள் களவு போவதுபோல், அப்பிள்ளைகள் தாம் முன்பிருந்த இடத்திற்கு வந்துவிடுவர். இங்ஙனம் இரண்டொருமுறை நிகழ்ந்தபின், சேவகன் அரசனையே அழைத்து வந்து, எல்லாக் காய்களையுங் கொண்டுபோவதுபோல் எல்லாப் பிள்ளைகளையுங் கொண்டுபோவன். இதோடு ஆட்டம் முடியும். இவ்விளையாட்டின் தோற்றம் வெளிப்படை.