உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௬

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

(10) நடுநிலை

விளையாட்டு இருபாலார்க்கும் இருபருவத்தார்க்கும் இன்பம் விளைப்பதேயாயினும், நடுநிலை போற்றாக்கால் இன்பத்திற்கு மாறாகத் துன்பமே விளையும். பணையம் வைத்தாடினும் வையாதாடினும், கெலித்தவர்க்கு மகிழ்ச்சியும் தோற்றவர்க்கு வருத்தமும் உண்டாவது திண்ணம். தோற்றவர் நடுநிலை போற்றின், அவ்வருத்தத்தை ஆற்றிக் கொள்வர்; அல்லாக்கால் தம் தோல்வியை ஒப்புக்கொள்ளாது கலாம் விளைப்பர் ; அல்லது கரவுநெறியால் வெல்ல முயல்வர்.

விளையாட்டிற் பெரியோருந் தப்புவர் என்பது, “சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும், தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக் கொண்டெறிந்தானைச் சோழன் மகனல்லையெனத் தாமப்பல்கண்ணனார் கடிந்து கூறிய புறப்பாட்டால் (43) அறியக் கிடக்கின்றது.

பெரியோரும் விளையாட்டில் தப்புவராயின், சிறியோர் தப்புவதைச் சொல்ல வேண்டுவதில்லை. சிறுவர் விளையாட்டில் நிகழ்ந்த சிறு சண்டையின் விளைவாக, எத்துணையோ பெரியோர் தம் கண்ணன்ன கேளிரைப் பகைத்ததும், அதனாற் பெருஞ் செல்வத்தைத் தொலைத்ததும் உண்டு. இதனால்தான், சிறுவர் சண்டையில் பெரியோர் தலையிடக் கூடாது என்னும் நெறிமுறையும் எழுந்தது.

விளையாட்டின்பங் கருதிப் பிறர்க்கு கோவைத் தருவனவுஞ் செய்தல் கூடாது. பிறர் நோவையும் தன் நோவு போற் பேணுந்தன்மை, விளையாட்டிற்கு இன்றியமையாததாகும். இராமன் தன் பையற் பருவத்தில் மந்தரையின் கூனில் மண்ணுண்டையால் அடித்ததற்காகத் தன் காளைப்பருவத்தில் பதினாலாண்டு அரசிழக்க நேர்ந்ததென்று, இராமகாதை கூறும். இங்ஙனம் விளையாட்டே வினையானது, என்றில்லாவாறு, கூடி விளையாடும் ஆடகரெல்லாம் நடுநிலையைப் போற்றுதல் வேண்டும்.