இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௨. ‘அட்டலங்காய் புட்டலங்காய்’
செவிலித்தாய் அல்லது மூதாய் (பாட்டி) பல குழந்தைகளை வரிசையாகக் கால்நீட்டி உட்காரவைத்து, அவர்கள் கால்களை இட வலமாகவும் வல இடமாகவும் தடவிக்கொண்டு,
“அட்டலங்காய் புட்டலங்காய் அடுக்கடுக்காய் மாதுளங்காய்
பச்சரிசி குத்திப் பரண்மேலே வைத்திருக்கு
தேங்காய் உடைத்துத் திண்ணைமேலே வைத்திருக்கு
மாங்காய் உடைத்து மடிமேலே வைத்திருக்கு
உப்புக் கண்டஞ் சுட்டு உறிமேலே வைத்திருக்கு
எந்தப் பூனை தின்றது—இந்தப் பூனைதின்றது”
என்று பாடி, “இந்தப் பூனை” என்று சொல்லும்போது ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டுவாள்.
பூனை உறியிலுள்ள உப்புக்கண்டத்தைத் தின்று விட்டதைக் குறிப்பதாக உள்ளது இவ்விளையாட்டு.