உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

II. பள்ளிக்கூட விளையாட்டுக்கள்
கோழிக்குஞ்சு—1

பல பிள்ளைகள், ஒருவர்பின் ஒருவராக ஒருவர் இடுப்பை இன்னொருவர் சேர்ந்து கட்டிக்கொண்டு அல்லது பற்றிக்கொண்டு, வரிசையாக நிற்பர்.தலைமையான பிள்ளை முதலில் நிற்கும். அப்பிள்ளைக்கு எதிரே மற்றொரு பிள்ளை நிற்கும்.

தலைமையான பிள்ளை கோழியையும், பின்னால் நிற்கும் பிள்ளைகள் அதன் குஞ்சுகளையும், எதிரே நிற்கும் பிள்ளை கழுகையும், நிகர்ப்பர். கழுகு கடைசிக் குஞ்சைப் பிடிக்க வரும். வரிசை வளைந்து குஞ்சுகள் தப்பும்.

கழுகு கோழியை நோக்கி “எனக்கொரு குஞ்சு தா; இன்றேல் பறந்து வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவேன்” என்னும். கோழி மறுத்து, கழுகு குஞ்சைப் பிடிக்காதபடி மறிக்கும். கழுகு சுற்றிச் சுற்றி வந்து கடைசிக் குஞ்சைப் பிடித்துக்கொண்டு போகும். இங்ஙனமே, பின்பு ஏனைக் குஞ்சுகளையும் ஒவ்வொன்றாய்ப் பிடித்துக்கொண்டு போய்விடும்.

கோழி மிக மிக வருந்தும்.

கோழிக்குஞ்சு—2

எட்டுப் பிள்ளைகள் சேர்ந்துகொள்வர். அவருள் ஒரு பிள்ளை கோழியையும், ஐந்து பிள்ளைகள் அதன் குஞ்சுகளையும், மற்றொரு பிள்ளை கழுகையும், மற்றுமொரு பிள்ளை நரியையும், நிகர்ப்பர்.

கோழி தன் குஞ்சுகளைக் கூண்டிற்குள் இருக்கச் சொல்லிவிட்டு, இரைதேட வெளியே சென்றுவிடும். குஞ்சுகள் தாய் பேச்சைத் தட்டிக் கூண்டிற்கு வெளியே வரும். கழுகு ஒரு குஞ்சை எடுத்துக்கொண்டுபோகும்.