142
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
ஏனைக்குஞ்சுகளெல்லாம் கூண்டிற்குள் ஓடிவிடும். பின்பு சற்றுநேரம் பொறுத்து மீண்டும் வெளியே வரும். கழுகு மீண்டும் ஒரு குஞ்சை எடுத்துக்கொண்டு போகும். இங்ஙனம் நாலு குஞ்சு போனபின் தாய் திரும்பிவரும். எஞ்சியுள்ள குஞ்சு நடந்ததைச் சொல்லும்.
கோழி கழுகிடம் சென்று, “என் குஞ்சுகளை யெல்லாங் கொடுத்துவிடு. அவற்றிற்குப் பதிலாக நான் உனக்கு நாளைக்குக் கறிதருவேன்” என்று வாக்களித்து, குஞ்சுகளை மீட்டுக்கொண்டுபோகும்.
மறுநாள், கழுகிற்குக் கறி எங்ஙனம் கொடுப்பதென்று கோழி கவன்றுகொண்டிருக்கும்போது, நரி அதனிடம் வந்து, “நீ கவலைப்படாதே. கழுகிற்குக் கறிகொடுக்க வேண்டியதில்லை. அதனின்று தப்புவதற்கு உனக்கொரு வலக்கரம் (தந்திரம்) சொல்லிக்கொடுப்பேன்,” என்று சொல்லும். கோழி அதை நம்பிக்கொண்டு சும்மா இருந்துவிடும். பின்பு நரி கழுகிடம் சென்று, “கோழி உனக்கு வாக்களித்தபடி கறி கொடுக்காதாம். நீ போய் அதன் குஞ்சுகளைப் பிடித்துக்கொண்டு வந்தால்தான் உனக்குக் கறி கிடைக்கும்” என்று மூட்டிவிடும். கழுகு உடனே போய், எல்லாக் குஞ்சுகளையும் ஒவ்வொன்றாகப் பிடித்துக்கொண்டு வத்துவிடும். நரிக்கு ஒரு குஞ்சு பங்கு கிடைக்கும்.
கோழி நரியை நம்பிக் கெட்டுப்போனதை நினைத்து மிகத் துயருறும்.
குறிப்பு :—மேற்கூறிய விளையாட்டிரண்டும் பேதைப் பருவப் பெண்களுக்குரியவை. ஐயாட்டைப் பருவத்தாராயின் ஆண்பிள்ளைகளும் சேர்ந்துகொள்ளலாம்.