உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

காவடித் தண்டனை எடுக்குங் கட்சியார்க்கன்றி அடிக்குங் கட்சியார்க்கில்லை யென்பதும் அறியப்படும்.

பாண்டிநாட்டில் எடுக்குங் கட்சியார்க்கு அவ் எடுத்தலேயன்றி வேறொரு தண்டனையுமில்லை.

II. கிட்டிப்புள்

கிட்டிப்புள் என்பது கில்லித்தாண்டின் மற்றொரு வகையே. இரண்டிற்குமுள்ள வேறுபாடாவன :—

பெயர் : கில்லி என்பது புள் என்றும், தாண்டு என்பது கிட்டி என்றும் பெயர்பெறும்.

முறை : கில்லித்தாண்டில், குச்சு குழியின் நீட்டுப்போக்கில் வைத்துக் கோலால் தட்டியெழுப்பி யடிக்கப் பெறும். கிட்டிப்புள்ளிலோ, குச்சுக் குழியின் குறுக்கே வைத்து அதற்கு நட்டுக்குறுக்காக ஒரு கோலைப் பிடித்து அது கையினால் தட்டியெடுக்கப்பெறும். கில்லித்தாண்டில், அடிக்கப்பட்ட குச்சை எடுப்பவன் எடுத்தெறிந்தபின், அதை அடிப்பவன் எந்நிலையிலும் அடிக்கலாம். ஆயின், கிட்டிப்புள்ளில், அது இயக்கத்தில் (அசைவில்) இருக்கும் போதே அதை அடித்தல்வேண்டும். அசைவு நின்று கிடையாய்க் கிடந்தபின், அதை அடித்தல் கூடாது. அடிப்பின், அடித்தவன் தவறியவனாவன். அதனால், எடுத்தெறிந்தவன் அடிக்கவேண்டியிருக்கும் இயங்குங் குச்சு நட்டுக்கு நிற்கும்போது அடிக்கப்படின், அது கில்லிக்குத்து எனப்படும்.

குச்சுப் போம் தொலைவை அளப்பதும் கத்திக்காவடி எடுப்பதும் கிட்டிப்புள்ளில் இல்லை. பிறவகையில் இது பெரும்பாலும் சில்லாங்குச்சை ஒத்திருக்கும்.

பெரும்பாலும் சிறுவரே, அவருள்ளும் இருவரே, இல் விளையாட்டை ஆடுவர். கோலால் குச்சைத் தட்டி யெழுப்பி அடிக்கமுடியாத இளஞ்சிறார்க்கென இவ் ஆடு எழுந்ததாகக் கூறுவர். சேரநாடாகிய மலையாள நாட்டில் கொட்டிப் புள் என வழங்கும் ஆட்டு, சில்லாங்குச்சைச் சேர்ந்ததே.