பகுதி]
கிளித்தட்டு
53
ஓடிவிட்டதைக் ‘கிளி போய்விட்டது’ என்னும் மரபுத் தொடராற் குறிப்பர்.
சோழநாட்டு முறை : சோழநாட்டில், இறங்கின கட்சியாருள் ஒருவன் ஒருமுறை கிளிக்குத் தப்பி ஓடினவுடன் ஆட்டை முடிந்துவிடாது. அங்ஙனம் ஓடினவன் குறித்த எல்லையிற் குவித்துவைத்திருக்கும் மண்ணிற் சிறிது ஒரு கையில் அள்ளிக்கொண்டு, மீண்டும் அரங்கிற்குட் புகுந்து, முன்பின்னாகத் திசைமாறித் தட்டுக்கட்டி நிற்கும் எதிர்க்கட்சியார் எல்லார்க்குந் தப்பித், தான் முதலிற் புகுந்த வழியாய் வெளியேறிவிட வேண்டும். அல்லாக்கால் தோல்வியாம்.
விளையாட்டு விளக்கம் : கிளித்தட்டு விளைபுலம்; கிளித்தட்டின் வரப்பு தவணை தட்டு பாத்தி என்பவை விளைபுலத்தின் வரப்பு தவணை தட்டு பாத்தி என்பவையாம். இறங்குபவர் கிளிகள்; மறிப்பவர் உழவர். இறங்குபவர் வெளியேற முயலுதல் கிளிகள் தாம் கொய்த கதிர்களைக் கௌவிக்கொண்டு பறந்துபோதல். மறிப்பவர் தடுத்தல் அக் கிளிகளைத் துரத்துதலும் அவை கௌவிச்செல்லும் கதிர்களைக் கவர்தலும். கிளி ஓடிப்போதல் கொய்த கதிரைக் கௌவிக்கொண்டு கிளிகள் எட்டாத உயரத்தில் பறந்துவிடுதல்.
விளையாட்டிற்கேற்பச் சில செய்திகள் மாற்றவும் கூட்டவும் பட்டுள்ளன.
விளையாட்டின் பயன் :
- ௧. பகைவருக்குப் பிடிகொடாமல் தப்பப் பழகுதல்.
- ௨. பகைவனையும் திருடனையும் ஓடும்போது படைக் காலத்தால் தாக்கப் பயிலுதல்.
- ௩. வேகமாய் ஓடுந்திறனை அடைதல்.
- ௪. கிளிகளால் விளையுளுக்குக் கேடு வராதவா முன்விழிப்பாக இருத்தல்.