இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
[பெண்பாற்
பழமாம். பன்னிருமுறைக்கும் கீழ்வருமாறு பாட்டுப் பாடப்படும்.
- (1) ஒன்றாவது ஒன்றாங்காய்.
- (2) இரண்டாவது இரத்தினக்கிளி (அல்லது ஈச்சங்காய்.)
- (3) மூன்றாவது முத்துச்சரம்.
- (4) நாலாவது நாற்காலி.
- (5) அஞ்சாவது பஞ்சவர்ணம்.
- (6) ஆறாவது பாலாறு.
- (7) ஏழாவது எழுத்தாணி.
- (8) எட்டாவது கொட்டாரம்.
- (9) ஒன்பதாவது ஓலைப்பூ.
- (10) பத்தாவது பனங்கொட்டை.
- (11) பதினொன்றாவது தென்னம் பிள்ளை.
- (12) தென்னைமரத் தடியிலே தேரோடும் பிள்ளையார்.
ஒருத்தி ஆடும்போது தவறிவிடின், அடுத்தவள் ஆடல் வேண்டும். ஆடினவள் மறுமுறையாடும்போது, மீண்டும் முதலிலிருந்தே ஆடல் வேண்டும்.
II. ஐந்தாங்கல் (ஒரு வகை)
ஆட்டின் பெயர் : ஐந்து கற்களைக்கொண்டு ஆடும் ஆட்டு ஐந்தாங்கல்.
ஆடு முறை : முந்தியாடுபவள், இந்த ஆட்டிற்குரிய ஐந்து கற்களையும் ஒருங்கே சிதறி, அவற்றுள் ஒன்றை எடுத்து மேலேபோட்டுக், கீழிருப்பவற்றுள் ஒன்றையெடுத்துக்கொண்டு பிடித்தல்வேண்டும். பின்பு, கையிலிருப்பவற்றுள் ஒவ்வொன்றை மேலே போட்டுப்போட்டு, ஒவ்வொரு தடவையும் கீழிருப்பவற்றுள் ஒவ்வொன்றை யெடுத்துக்கொண்டு பிடித்தல் வேண்டும்.