(2) இரவாட்டு
௧. ‘பாக்குவெட்டியைக் காணோமே’
ஆட்டின் பெயர் : ‘பாக்குவெட்டியைக் காணோமே’ என்று சொல்லித் தொடங்கும் விளையாட்டு, அச்சொல்லையே பெயராகக் கொண்டது: இது வடகொங்கு நாட்டில் ‘பருப்புச்சட்டி’ எனப்படும்.
ஆடுவார் தொகை : பொதுவாக அறுவர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர்.
ஆடிடம் : ஊர்ப்பொட்டல் இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை : தலைமையான இரு பெதும்பையார்[1] அண்ணாவியர்போல் எதிரெதிர் நின்றுகொள்வர். அவருள் ஒருத்தியின் பின்னால், ஏனைச் சிறுமியரெல்லாரும் ஒருத்தி அரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு வரிசையாய் நிற்பர். இன்னொருத்தி, அவ்வரிசைக்கு எதிர்நின்று மறுக்காட்டி வலமும் இடமும் சுற்றிச்சென்று, வரிசையாய் நிற்கும் சிறுமியருள் அண்ணாவியொழிந்த பிறருள் ஒருத்தியை அல்லது பலரைத் தொடமுயல்வாள். அவள் வலஞ் செல்லும்போது இடமும், இடஞ் செல்லும்போது வலமுமாக, வரிசையாய் நிற்குஞ் சிறுமியர் வளைந்து வளைந்து இயங்குவர். தொடப்பட்ட பெண் நீங்கிவிடவேண்டும். இங்ஙனம் (அண்ணாவியொழிந்த) எல்லாப் பெண்களும் தொடப்படும்வரை, ஆட்டுத் தொடரலாம்.
ஓர் ஆட்டை முடிந்தபின் மறுமுறையும் முன்போன்றே ஆடப்பெறும்.
ஆட்டு நிகழும்போது, தனித்து நிற்பவளும் வரிசை முதல்வியுமான அண்ணாவியர் இருவரும், பின் வருமாறு பாட்டுப்பாடி நெடுகலும் உறழ்ந்துரைப்பர். பாட்டு முடிந்தவுடன் திருப்பப்படும்.
- ↑ * 5 அகவை முதல் 11 அகவை வரையுள்ள பெண் பெதும்பை.