௨. நிலாக்குப்பல்
ஆடுவாரெல்லாரும் 1 ஆம் கட்சி 2 ஆம் கட்சி என இரு கட்சியாகப் பிரிந்து கொள்வர்.
பின்பு, இரு கட்சியாரும் வெவ்வேறு பக்கமாகச்சென்று, குறிப்பிட்ட எல்லைக்குள், மரநிழலும் தெருச் சந்தும் பொட்டலும் போன்ற பல இடங்களில் ஆளுக்கொன்றாகச் சிறுசிறு மண் குப்பல்களை வைத்துவிட்டு வந்துவிடுவர். மண் குப்பலுக்கு அடையாளமாக மேலே குச்சு நட்டுவைப்பதுமுண்டு. சில சமயங்களில் மண் குப்பலுக்குப் பதிலாகத் தென்னைமரம் வரைவர்.
இரு கட்சியாரும் குப்பல் வைத்துவிட்டு வந்த பின், ஒவ்வொரு கட்சியாரும் ஒருங்கே சென்று, எதிர்க்கட்சியார் வைத்த குப்பல்களைக் கண்டுபிடித்து அழித்துவிடுவர். முதலாவது, ஒன்றாங் கட்சியார் இரண்டாங் கட்சியாரின் குப்பல்களைக் கண்டுபிடிப்பர். எல்லாக் குப்பல்களையும் கண்டுபிடிப்பது பெரும்பாலும் அரிதாகும். கண்டுபிடித்தவற்றை அழித்தபின், “வயிறு நிரம்பிவிட்டதா” என்று 2 ஆம் கட்சியார் கேட்பர். மேலுங் கண்டுபிடிக்க விருப்பமிருப்பின், “இன்னும் வயிறு நிரம்பவில்லை” என்றும், விருப்பமில்லாவிடின், “வயிறு நிரம்பிவிட்டது” என்றும், ஒன்றாங் கட்சியார் பதிலுரைப்பர். பின்பு, 2 ஆம் கட்சியார் 1 ஆம் கட்சியார் கண்டுபிடியாத குப்பல்களைக் காட்டி அவற்றை எண்ணிக்கொள்வர். இவ்வாறே 2 ஆம் கட்சியார் 1 ஆம் கட்சியாரின் குப்பல்களைக் கண்டுபிடிக்கும்போதும் நிகழும். இங்ஙனம் இரு கட்சியாரும் கண்டுபிடித்து முடிந்தபின், எக்கட்சியார் மிகுதியான குப்பல்களைக் கண்டுபிடித்திருக்கின்றனரோ, அக்கட்சியார் தம் கட்சியை அரசன் (ராஜா) என்று சொல்லிக் கொள்வர். இங்ஙனம் பலமுறை ஆடி, 50 அல்லது 100 எனக் குறித்த எண்ணிக்கையை முந்தியடைந்த கட்சியார் வென்றவராவர். தோற்ற கட்சியார் தோப்புக்கரணம் போடல்வேண்டும்.