பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தமிழ்ப் பழமொழிகள்


அகங்கை புறங்கை ஆனாற் போல.

அகங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா? 60

அகடவிகடமாய்ப் பேசுகிறான்.

அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே.

(அகத்தியை வீட்டில் வளர்க்கக் கூடாது என்பர்.)

அகத்திக் கீரைக்கு மஞ்சள் போட்டு ஆவது என்ன?

அகத்தியன் நற்றமிழுக்கும் குற்றம் கூறுவார்.

அகத்திலே ஆயிரம் காய்த்தாலும் புறத்திலே பேசலாமா? 65

அகத்திலே இருப்பவன் அடிமுண்டை என்றானாம்; பிச்சைக்க வந்தவன் பீமுண்டை என்றானாம்.

அகத்திலே உண்டானால் அம்பி சமத்து.

அகத்துக்காரர் அத்து முண்டை என்றால், பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்றானாம்.

{பா-ம்.) அகத்துக்காரப் பிராம்மணன் அடிமுண்டை என்றால்.

அகத்துக்காரர் இருந்த போது தலைநிறைய மயிர் வைத்துக் கொண்டிருந்தேன் என்றாளாம்.

அகத்துக்கு அழகு அகமுடையாள். 70

அகத்துக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல்.

(அசல்-அயல்.)

அகத்துக்கு முகம் கண்ணாடி.

அகத்துக்கு மூத்தது அசடு.

அகத்துப் பிராம்மணன் அவிசாரி என்றால் பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்கிறான்.

அகத்துப் பிள்ளை ஊட்டுப் பிள்ளை; அடிக்கப் பிள்ளை அசல் வீட்டிலே. 75

அகதிக்கு ஆகாசமே துணை.

அகதிக்கு ஆண்டவன் துணை.

(பா-ம்.) தெய்வமே துணை.

அகதி சொல் அம்பலம் ஏறாது.

அகதி தலையில் பொழுது விடிந்தது.

அகதி பெறுவது பெண் பிள்ளை; அதுவும் வெள்ளி பூாாடம். 80

அகதியை அடித்துக் கொல்லுகிறதா?

(பா-ம்) பிடித்து.

அகதியைப் பகுதி கேட்கிறதா?

அகப்பட்டதைச் சுருட்டடா ஆண்டியப்பா.