பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தமிழ்ப் பழமொழிகள்


ஆறாவது பிள்ளை ஆனை கட்டி வாழ்வான்.

ஆறாவது பிள்ளை பிறந்தால் ஆனை கட்டி வாழலாம்.

(ஆண்பிறந்தால்.)

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. 2665

ஆறிலே செத்தால் அறியா வயசு; நூறிலே செத்தால் நொந்த வயசு.

ஆறின கஞ்சி பழங்கஞ்சி.

ஆறின சோறு ஆளனுக்கு மிஞ்சும்.

ஆறின சோறு பழஞ் சோறு.

ஆறின புண்ணிலும் அசடு நிற்கும். 2670

(அசடு-பொறுக்கு.)

ஆறினால் அச்சிலே வார்; ஆறாவிட்டால் மிடாவிலே வார்,

ஆறு அல்ல, நூறு அல்ல, ஆகிறது ஆகட்டும்.

ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.

(இல்லை, வாக்குண்டாம்.)

ஆறு இல்லா ஊருக்குக் கேணியே கங்கை.

ஆறு எல்லாம் கண்ணீர்; அடி எல்லாம் செங்குருதி. 2675

ஆறு எல்லாம் பாலாய் ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கும்?

ஆறுக்கு இரண்டு பழுதில்லை.

ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி; ஆறு கடந்தால் நீ ஆர்? நான் ஆர்?

ஆறு கடக்கைக்குப் பற்றின தெப்பம் போகவிடுமாப் போலே.

ஆறு கல்யாணம்; மூன்று பெண்கள்; மார்போடே மார்பு இடிபடுகிறது. 2680

(தள்ளுகிறது.)

ஆறு காதம் என்கிறபோது கோவணத்தை அவிழ்ப்பானேன்?

(அரைச் சீலையை, அவிழ்த்துக் குடுமியிலே கட்டிக் கொண்டானாம்.)

ஆறு காதம் என்கிற போதே கோவனம் கட்டினானாம்.

ஆறு காதம் என்ன, அவிழ்த்துக் கொண்டானாம் அரைத்துணியை.

ஆறு கெட நாணல் இடு; ஊறு கெடப் பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலியை விடு.

(முதலையை.)

ஆறு கெடுத்தது பாதி; தூறு கெடுத்தது பாதி. 2685

ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி.