பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

123


ஆனைக்கு ஆறு அடி; பூனைக்கு இரண்டு அடி.

ஆனைக்கு ஆனை கைகொடுத்தாற் போல.

ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.

(வெற்றி வேற்கை.)

ஆனைக்கு உடல் எல்லாம் தந்தம்; மனிதனுக்கு உடல் எல்லாம் பொய். 2835

ஆனைக்கு எதிரி நெருஞ்சி முள்.

ஆனைக்கு ஏற்ற கண்ட்ர கோடாலி.

ஆனைக்கு ஒரு கவளம்; ஆளுக்கு ஒரு வேளைச் சோறு.

ஆனைக்கு ஒரு காலம்; பூனைக்கு ஒரு காலம்.

ஆனைக்கு ஒரு பிடி; எறும்புக்கு ஒன்பது பிடி. 2840

ஆனைக்குக் கட்டிய கூடாரம் போல.

ஆனைக்குக் கண் அளந்தார்; ஆட்டுக்கு வால் அளந்தார்.

ஆனைக்குக் கண் அளந்து வைத்திருக்கிறது.

ஆனைக்குக் கண் சிறுத்து வர, காது அசைந்து வர.

ஆனைக்குக் கரும்பு; கழுதைக்குத் தாள்; நாய்க்குக் கருப்புக் கட்டி. 2845

ஆனைக்குக் கரும்பும் நாய்க்கு வெள்ளெலும்பும் போல,

ஆனைக்குக் கால் குட்டை; பானைக்குக் கழுத்துக் குட்டை.

ஆனைக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் போதுமா?

ஆனைக்குக் கோபம் வந்தால் அகத்தைப் பிளக்கும்; பூனைக்குக் கோபம் வந்தால் புல்லுப்பாயைப் பிறாண்டும்.

(தின்னும்.)

ஆனைக்குக் கோவணம் கட்ட ஆராலே முடியும்? 2850

ஆனைக்குச் சிட்டுக்குருவி மத்தியஸ்தம் போனாற்போல.

ஆனைக்குச் செருப்புத் தைத்தாற்போல.

ஆனைக் குட்டிக்குப் பால் வார்த்துக் கட்டுமா?

ஆனைக் குட்டி கொழுக்கவில்லையே என்று உட்கார்ந்து அழுததாம் சிங்கக் குட்டி.

ஆனைக்குத் தலை மட்டம்; தவளைக்குத் தொடை மட்டம். 2855

ஆனைக்குத் தீனி அகப்பையில் கொடுத்தால் போதாது.

ஆனைக்குத் தீனி இடும் வீட்டில் ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா?

ஆனைக்குத் தீனி வைத்துக் கட்டுமா?

ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.

ஆனைக்குத் தெரியுமா அங்காடி விலை? 2860