பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தமிழ்ப் பழமொழிகள்


இளைத்தவன் ஒரு வருஷத்துக்கு எள் விதைக்க வேண்டும்.

இளைத்தவன் சிநேகிதனைச் சேர்.

இளைத்தவன் தலையில் ஈரும் பேனும்.

இளைத்தவன் தலையில் சொட்டு.

(கொட்டு.)

இளைத்தவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி. 3625

(மைத்துனி.)

இளைத்தவனைக் கண்டானாம், ஏணிப் பந்தம் பிடித்தானாம்.

இளைத்தவனை வலியான் கோபித்தால் வலியானை வல்லவன் கேட்பான்.

இளைத்து இனத்தாரிடம் போவானேன்?

இளைது என்று பாம்பு இகழ்வார் இல்.

(பழமொழி நானூறு.)

இளையாள் இலை தின்னி; மூத்தாள் காய் அரிவாள். 3630

இளையாள் முகமோ, இழையாடிக் காற்றோ?

இளையாள் மோகம் கண்ணை மறைக்கிறது.

இளையாளே வாடி மலையாளம் போவோம்; மூத்தாளே வாடி முட்டிக் கொண்டு சாவோம்.

இளையாளைக் கிழவன் அரிக்கிறது போல.

இளையானே ஆயினும் மூத்தாளே ஆகும் மகன். 3635

(பழமொழி நானூறு.)

இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.

இறகு இல்லாப் பறவைக்கு உட்கார ஒரு நாழிகை இல்லை.

இறகு முற்றிப் பறவை ஆனால் எல்லாம் தன் வயிற்றைத்தான் பார்க்கும்.

இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்; ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்.

இறங்கு துறையிலே நீச்சானால் ஏறு துறையிலே எப்படி? 3640

(இறங்கும்போதே, ஏறு கரையில்.)

இறங்கு பொழுதிலே மருந்து குடி.

இறடுங்கால் இறடும்.

இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.