பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தமிழ்ப் பழமொழிகள்


உடம்பு தேற்றிக் கொண்டு அல்லவா யோகத்தில் போக வேண்டும்?

உடம்பு போனால் போகிறது; கை வந்தால் போதும்.

(உடும்பு.)

உடம்பு முழுவதும் நனைந்தவர்க்குக் கூதல் என்ன?

உடம்பை ஒடித்துக் கடம்பில் விடு. 3885

(உடம்பை முறித்து, கடம்பமரக் கட்டிலில்.)

உடம்பைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் சமானமாகாது.

உடம்போடே ஒரு நாட்டியம் உண்டா?

உடம்போடே பிறந்தது.

உடல் அளவு விரதம்; பொருள் அளவு தானம்.

உடல் இரண்டு, உயிர் ஒன்று. 3890

உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாக் கவலை.

(உள்ளவனுக்கு.)

உடல் ஒருவனுக்குப் பிறந்தது; நாக்குப் பலருக்குப் பிறந்தது.

உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு தெரு முழுவதும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.

உடல் மெச்சப் பால் குடிக்கிறாயா? ஊர் மெச்சப் பால் குடிக்கிறாயா?

உடலுக்குக் கை துரோகம். 3895

உடலுக்குள்ளே நாக்கை வளைக்கிறதா?

உடலுக்கோ பால் வார்த்து உண்பது? ஊருக்கோ பால் வார்த்து உண்பது?

உடலும் உயிரும் போல.

உடன் பிறந்தே கொல்லும் வியாதி.

உடன் பிறப்பால் தோள் வலி போம். 3900

(உடன் பிறப்பு உள்ளவனுக்கு.)

உடன் பிறப்பு இல்லாத உடம்பு பாழ்.

உடாப் புடைவை பூச்சிக்கு இரை.

உடுக்காத புடைவையைச் செல் அரிக்கும்.

உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கை வேறு.

உடுக்கைக்கு இடை சிறுத்தால் ஓசை உண்டு; உரலுக்கு இடை சிறுத்தால் உதவி என்ன? 3905

உடுத்த சீலை பாம்பாய்க் கடித்தது போல.

(உடுத்தின புடைவை.)