பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தமிழ்ப் பழமொழிகள்


உண்பான் தின்பான் திவசப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.

உண்பான் தின்பான் சேவைப் பெருமாள்; குத்துக்கு நிற்பான் வைராகி.

(சேப்பெருமாள்.)

உண்பான், தின்பான் நயனப்ப செட்டி; உடன் கட்டை ஏறுவான் பெருமாள் செட்டி.

உண்பான் தின்பான் பைராகி; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி. 4030

உண்மை உயர்வு அளிக்கும்.

(தரும்.)

உண்மைக்கு உத்தரம் இல்லை.

உண்மை சொல்லிக் கெட்டாரும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.

உண்மை சொன்னால் உண்மை பலிக்கும்; நன்மை சொன்னால் நன்மை பலிக்கும்.

உண்மை நன்மொழி திண்மை உறுத்தும். 4035

உண்மைப் படு, உறுதிப்படு.

உண்மையைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.

உண்மையைச் சொன்னால் உடம்பு எரிச்சல்.

உணர்வு இல்லாக் கருவியும் உப்பு இல்லாச் சோறும் சரி.

(உணவும் சரி.)

உணவு விளைவிப்பது சட்டியில்; உறவு விளைவிப்பது பட்டியில். 4040

உத்தமச் சேரிக் குயவனுக்கு ஒன்றால் ஒன்று குறைவு இல்லை,

உத்தம சேவகன் பெற்ற தாய்க்கு அதிகம்.

உத்தமம் ஆன பத்தினி ஊர்மேலே வருகிறாள்; வீட்டுக்கு ஒரு துடைப்பக்கட்டை, உஷார், உஷார்.

உத்தமனுக்கு உடம்படிக்கை ஏன்?

உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை. 4045

உத்தமனுக்கு ஓலை எதற்கு?

உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடம்படிக்கை வேண்டாம்.

(பா-ம்.) போக்கிரிக்கும்.

உத்தரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை.

உத்தரத்து அளவு கேட்டால் அரிவாள் பிடி அளவு வரும்.

உத்தரம் இல்லாமல் வீடு கட்டுகிற மாதிரி. 4050