பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தமிழ்ப் பழமொழிகள்


ஊண் மிச்சம் உழவிலும் இல்லை.

ஊணன் கருமம் இழந்தான்; உலுத்தன் பெயர் இழந்தான்.

ஊணினால் உறவு; பூணினால் அழகு.

ஊணினால் புத்தி: பூணினால் சாதி. 4605

ஊணுக்கும் உடைக்கும் என்னைக் கூப்பிடு; ஊர்க் கணக்குக்குத் தம்பியைக் கூப்பிடு.

ஊணுக்கு முந்து, படைக்குப் பிந்து.

(முந்தி, பிந்தி.)

ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை.

ஊணும் உறக்கமும் ஒத்தார்க்கு ஒத்த படி.

(ஊணும் உறையுளும்.)

ஊத்தை திரண்டு அச்சாணி ஆகுமா? 4610

ஊத்தை திரண்டு கழுக்காணி ஆச்சுது.

ஊத்தைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தது போல.

ஊத்தைப் பெண் பெற்ற பிள்ளை கழுவக் கழுவத் தேயும்.

ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை; பசி போகத் தின்றவனும் இல்லை.

(உண்டவனும்.)

ஊத்தை போனாலும் உள்வினை போகாது. 4615

(ஊழ்வினை.)

ஊத்தை வாய்க்கும் உமிழ் நீருக்கும் கேடு.

ஊத்தை வாயன் தேடக் கர்ப்பூர வாயன் தின்ன.

ஊத்தை வாயன் தேட நாற்ற வாயன் தின்ன.

(நாறல் வாயன்.)

ஊத அறிந்தவன் வாதி, உப்பு அறிந்தவன் யோகி.

(உப்பு.)

ஊதாரிக்குப் பொன்னும் துரும்பு. 4620

ஊதி ஊதி உள்ளதெல்லாம் பாழ்.

ஊதின சங்கு ஊதினால் விடிகிற போது விடியட்டும்.

ஊதினால் போம்; உறிஞ்சினால் வரும்.

ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.

(ஆமை வீட்டைக் கெடுக்கும்.)

ஊமை ஊரைக்கெடுக்கும்; வாயாடி பேரைக் கெடுக்கும். 4625