பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

219


எதிரும் புதிரும் உட்கார்ந்து கொள்ளுதல்.

எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு.

எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும்.

எதை வாரிக் கட்டிக் கொண்டு போகிறது?

எந்த ஆண்டாருக்கு எந்த மடம் சதம்? 5095

எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டச் சுடர்.

எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.

எந்தத் தலைமுறையிலோ ஒரு நாத்தனாராம்; அவள் கந்தல் முறத்தை எடுத்துச் சாத்தினாளாம்.

எந்தத் துரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச் சுமை போகாது.

எந்த நாய் எந்தச் செருப்பைக் கடித்தால் என்ன? 5100

எந்த நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்கு ஆகாது.

எந்தப் புராணத்தில் இல்லாவிட்டாலும் கந்த புராணத்தில் இருக்கும்.

எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ?

எந்தப் பொருளும் கந்த புராணத்திலே.

(‘புளுகும்’ என்பது தவறான பாடம்.)

எந்த மடத்துக்கு எந்த ஆண்டி சதம்? 5105

எந்த மனசும் மைந்தனை வெறுக்குமா?

எந்த வேஷம் வந்தாலும் தீவட்டிக்காரனுக்குக் கேடு.

எந்நேரமும் அவள் பேரில் கண்ணாய் இருக்கிறான்.

எப்படியாவது என் கோயில் வாழ.

எப்பயிர் செய்யினும் நெற்பயிர் செய். 5110

எப்பிறை கோணினாலும் தைப்பிறை கோணலாகாது.

எப்போது பார்த்தாலும் என்ன சண்டை, நாயும் பூனையும் மாதிரி?

எம்மதமும் சம்மதம்.

எமன் ஏறுகிற கிடாவாக இருந்தாலும் உழுது விடுவான்.

எமன் ஒருவனைக் கொல்லும்; ஏற்றம் மூவரைக் கொல்லும். 5115

எமன் கடாவை ஏரில் பூட்டினது போல,

எமன் கையில் அகப்பட்ட உயிர் போல,

எமன் நினைக்கவும் பிள்ளை பிழைக்குமா?