பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தமிழ்ப் பழமொழிகள்


எல்லாரும் சட்டியைப் போட்டு உடைத்தால் இவன் சிரட்டையைப் போட்டு உடைக்கிறான்.

(சிரட்டை-கொட்டங்கச்சி.)

எல்லாரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச்சரிந்து விழுந்தார்.

எல்லாரும் கப்பல் ஏறி ஆயிற்று; இனி அம்மானார் பொற்பட்டம் கட்டப் போகிறார். 5265

எல்லாரும் கூடி எனக்குக் குல்லாப் போட்டார்கள்.

(நாமம்.)

எல்லாரும் கூடிக் குல்லாவைத் தந்தார்கள்.

எல்லாரும் தடுக்கின் கீழே நுழைந்தால் அவன் கோலத்தின் கீழ் நுழைகிறான்.

எல்லாரும் தேங்காய் உடைத்தால் நான் சிரட்டையாவது உடைக்கலாம்.

எல்லாரும் நல்லவர்கள், சேர்ந்தால் பெரியவர்கள். 5270

எல்லாரும் நல்லாரா? கல் எல்லாம் மாணிக்கமா?

(மனிதர் எல்லாம்.)

எல்லாரும் நெல்லை உலர்த்தினால் எலி வாலை உலர்த்திற்றாம்.

எல்லாரும் ரெட்டியார் ஆனால் பின்னே ஓடுகிறது ஆர்?

எல்லாரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்?

(பல்லக்கை யார் தூக்குவார்கள்.)

எல்லாரும் பாக்கு; இவன் ஒரு தோப்பு. 5275

எல்லாரையும் காக்க ஓர் ஈசன் இருக்கிறான்.

எல்லாரையும் சொல்லி ராஜா குசு விட்டானாம்.

எல்லாவற்றுக்கும் உண்டு இலையும் பழுப்பும்.

எல்லாவற்றுக்கும் ஒரு சொட்டு உண்டு.

எல்லாவற்றுக்கும் ஓர் அழுகை அழுங்கள். 5280

எல்லாவற்றையும் செய்து கழுநீர்ப் பானையில் கைவிட்டது போல,

எல்லா வீட்டிற்கும் இரும்பு அடுப்பே ஒழியப் பொன் அடுப்பு இல்லை.

எல்லா வேலையும் செய்வான்; செத்தால் பிழைக்கமாட்டான்.