பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

249


ஐப்பசி அழுகல் தூற்றல்.

ஐப்பசி அறக் காய்ந்தால் அண்ணன் இட்ட பயிரும் சரி; தம்பி இட்ட பயிரும் சரி.

ஐப்பசி அறக் காய்ந்தால் ஆடு ஒரு மாடு; மாடு ஒரு மலை. 5765

ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லா விட்டால் அண்ணனுக்கும் சரி, தம்பிக்கும் சரி.

ஐப்பசி தலை வெள்ளமும் கார்த்திகை கடை வெள்ளமும் கெடுதி.

ஐப்பசி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்ததாம்.

ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் நெல் ஆகாது.

ஐப்பசிப் பிறை கண்ட வேளாளா, கைப்பிடி நாற்றைக் கண்டு கரையேறு. 5770

(கைப்பாதி கொண்டு.)

ஐம்பசிப் பணி அத்தனையும் மழை.

(அப்போதே மழை.)

ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும்.

ஐப்பசி மாதத்தில் சம்பா நட்டால் ஆனைக் கொம்பு முளைக்கும்.

ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.

ஐப்பசி மாதத்து நடவும் அறுபது பிராயத்திற் பிள்ளையும். 5775

(பயன் இல்லை.)

ஐப்பசி மாதத்து நாற்றை அருகில் சாத்து.

ஐப்பசி மாதத்து வெயிலில் அன்று உரித்த தோல் அன்றே காயும்.

ஐப்பசி மாதம் அடை மழை.

ஐப்பசி மாதம் அழுகைத் துாற்றல்; கார்த்திகை மாதம் கனத்த மழை.

(அழுகல் தூற்றல்; அடை மழை.)

ஐப்பசி மாதம் பசு கறக்குமுன் பன்னிரண்டு பாட்டம் மழை. 5780

ஐப்பசி மேல்காற்று அப்போதே மழை.

ஐப்பசி விதைப்பாட்டிற்கு ஐயப்பாடு இல்லை.

ஐப்பசி வெள்ளாமை அரை வெள்ளாமை.

ஐ பை சுரைக்காய பக்கா நெய், வெள்ளைக்காரன் கப்பலிலே தீயைக் கொளுத்தி வை.

(நாஞ்சில் வழக்கு.)