பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தமிழ்ப் பழமொழிகள்



அதிகாரியுடனே எதிர்வாதம் பண்ணலாமா?

அதிகாரியும் தலையாரியும் கூடி விடியுமட்டும் திருடலாம். 640

(ஒன்றானால்.)

அதிகாரி வந்தால் அடித்துக் காட்டு; கூத்தாடி வந்தால் கொட்டிக் காட்டு.

அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்தது போல.

அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மிக் கல்லை உடைக்கும்.

அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது.

அதிசயம் அடி ஆவடை, கொதிக்கிற கூழ் சிரிக்கிறது. 645

அதிசயம் அதிசயம் அத்தங்காரே கொதிக்கிற குழம்பு சிரிக்கிறது.

(வேங்கடம்மா. கொதிக்கிற கஞ்சி.)

அதிசயமாய் ஒருத்திக்குப் பிள்ளை பிறந்ததாம், கடப்பாரையை எடுத்துக் காலில் குத்திக் கொண்டாளாம்.

அதிசயமான ஊரிலே ஒரு பிள்ளை பிறந்ததாம்; அது தொப்புள் கொடி அறுப்பதற்குள் கப்பல் ஏறிப் போயிற்றாம்.

அதிசயமான ரம்பை, அரிசி கொட்டுகிற தொம்பை.

அதிர்ந்து அடிக்கிறவனுக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை. 650

(அடித்தால்.)

அதிர்ந்து வராத புருஷனும் மிதந்து வராத அரிசியும் பிரயோசனம் இல்லை.

அதிர்ந்து வரும் புருஷனும் முதிர்ந்து வரும் சோறும்.

அதிர் வெடி கேட்ட குரங்கு.

அதிர்ஷ்டக்காரன் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.

அதிர்ஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது. 655

அதிர்ஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.

அதிர்ஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் இருந்தாலும் அதையும் பூனை குடிக்கும்.

அதிர்ஷ்டம் கெட்ட கழுக்காணி.

அதிர்ஷ்டம் கெட்டதுக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்

(கெட்டவனுக்கு.)

அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும். 660

அதிர்ஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல.

அதிர்ஷ்டவாள் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும்.

அதிர அடித்தாருக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை.

(ஐயரும் இல்லை.)

அதிர அடித்தால் உதிர விளையும்.