பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தமிழ்ப் பழமொழிகள்


அரசனுக்கு ஓர் ஆனை இருந்தால் ஆண்டிக்கு ஒரு பானையாவது இராதா?

அரசனுக்குச் செங்கோல்; சம்சாரிக்கு உழவு கோல்.

(சம்சாரி-பயிரிடுகிறவன்.)

அரசனுக்குத் துணை வயவாள்.

அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியாருக்கு அநுகூலம்.

அரசனும் சரி, அரவும் சரி. 945

(பாம்பும்.)

அரசனும் சரி அழலும் சரி.

(நெருப்பும்.)

அரசனும் ஆண்டி ஆவான்; ஆண்டியும் அரசன் ஆவான்.

அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.

அரசனே முட்டி எடுக்கிறான்; அவன் ஆனை கரும்புக்கு அழுகிறதாம்.

(முட்டி-பிச்சை.)

அரசனைக் கண்ட கண்ணுக்குப் புருஷனைக் கண்டால் கொசுப் போல இருக்கிறது. 950

(மயிர் மாத்திரமாக இருக்கிறது.)

அரசனைக் காட்டிக் கொடுப்பது அமைச்சனுக்குத் தர்மம் அல்ல.

அரசனை நம்பிப் புருஷனைக் கை விட்டது போல.

அரசனோடு எதிர்த்த குடிகள் கெட்டுப்போகும்.

(பகைத்த.)

அரசாங்கத்துக் கோழிமுட்டை அம்மிக் கல்லையும் உடைக்கும்.

அரசிலையும் மண்ணாங் கட்டியும் உறவு கொண்டாடினவாம். 955

அரசு அறிய வீற்றிருந்த வாழ்வு விழும்.

அரசு இல்லா நாடு அலைக்கழிந்தாற் போல.

அரசு இல்லாப் படை வெல்வது அரிது.

அரசு உடையானை ஆகாசம் காக்கும்.

அரசுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். 960

(வெற்றி வேற்கை.)

அரண்மனை ஆனைக்கு அம்பாரி வைத்தாலும் ஆலய ஆனைக்குக் கொட்டு மேளம் போதுமே.

அரண்மனை உறவைக் காட்டிலும் அடுக்களை உறவுதான் மேல்.

அரண்மனைக் காரியம் அறிந்தாலும் சொல்லாதே.

அரண்மனை காத்தவனுக்கும் அடுக்குள் காத்தவனுக்கும் குறைவு இல்லை.

(காத்தவனும் வீண் போகான்.)