பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



52

தமிழ்ப் பழமொழிகள்


அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா?

(ஆகும்.)

அரை வேலையைச் சபையிலே கொண்டு வருகிறதா?

அரோகரா என்பவனுக்குப் பாரமா? அமுது படைப்பவனுக்குப் பாரமா? 1125

அல்லக் காட்டு நரி பல்லைக் காட்டுகிறது போல.

அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.

அல்லல் அற்ற படுக்கையே அமைதியைத் தரும்.

அல்லல் ஒரு காலம்; செல்வம் ஒரு காலம்.

(மல்லல் ஒரு காலம் )

அல்லல் காட்டு நரி பல்லைக் காட்டிச் சிரித்ததாம். 1130

அல்லல் பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.

அல்லவை தேய அருள் பெருகும்.

அல்லாத வழியில் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் ஆகியவை ஆகா.

அல்லாதவன் வாயில் கள்ளை வார்.

அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல். 1135

அல்லாவுக்குக் குல்லாப் போட்டவன் முல்லாவுக்குச் சல்லாப் போட்டானாம்.

அல்லாவை நம்பிக், குல்லாவைப் போட்டால் அல்லாவும் குல்லாவும் ஆற்றோடே போச்சு.

அல்லி பேரைக் கேட்டாலும் அழுத பிள்ளை வாய் மூடும்.

அல்லும் பகலும் கசடு அறக் கல்.

அல்லோல கல்லோலப் படுகிறது. 1140

அலுத்துச் சலித்து அக்காள் வீட்டுக்குப் போனாளாம்; அக்காள் இழுத்து மச்சானிடம் விட்டாளாம்.

(அத்திம்பேரைக் காட்டினாளாம்.)

அலுத்துக் கொழுத்து அக்காளண்டை போனாளாம்; அக்காள் இழுத்து மச்சானிடத்தில் விட்டாளாம்.

அலுத்துச் சலித்து அம்பட்டன் வீட்டுக்குப் போனதற்கு இழுத்துப் பிடித்துத் தலையைச் சிரைத்தானாம்.

அலுத்து வியர்த்து அக்காள் வீட்டுக்குப் போனால், அக்காள் இழுத்து மச்சானண்டை போட்டாளாம்.

அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும். 1145

அலை அடங்கியபின் ஸ்நானம் செய்ய முடியுமா?

அலை எப்பொழுது ஓயும்? தலை எப்பொழுது முழுகுகிறது?

(ஒழியும்.)