பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தமிழ்ப் பழமொழிகள்


அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான்; இளகின நெஞ்சன் எவருக்கும் உதவுவான்.

அழுத கண்ணீரும் கடன்.

அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.

அழுத பிள்ளை உரம் பெறும்.

அழுத பிள்ளைக்கு வாழைப்பழம். 1405

அழுத பிள்ளை சிரித்ததாம்; கழுதைப் பாலைக் குடித்ததாம்.

அழுத பிள்ளை பசி ஆறும்.

(பி-ம்.) பிள்ளை பிழைக்கும்.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுத பிள்ளையும் வாய் மூடும் அதிகாரம்.

அழுத மூஞ்சி சிரிக்குமாம்; கழுதைப் பாலைக் குடிக்குமாம். 1410

அழுதவளுக்கு வெட்கம் இல்லை; துணிந்தவளுக்குத் துக்கம் இல்லை.

அழுதவனுக்கு ஆங்காரம் இல்லை.

(பி-ம்.) அகங்காரம்

அழுதால் துக்கம்; சொன்னால் வெட்கம்.

அழுதால் தெரியாதோ? ஆங்காரப் பெண் கொள்ளாதோ?

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். 1415

(பி-ம்.) அழுதும் அழுதும்,

அழுது கொண்டு இருந்தாலும் உழுது கொண்டிரு.

அழுது முறையிட்டால் அம்பலத்தில் கேட்கும்.

அழுபிள்ளைத் தாய்ச்சிக்குப் பணம் கொடுத்தால் அநுபவிக்க ஒட்டுமா குழந்தை?

(பி-ம்.) பணயம்.

அழுவார் அழுவார் தம் தம் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை.

(யாழ்ப்பாண வழக்கு.)

அழுவார் அழுவார் எல்லாம் தன் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை. 1420

அழுவார் அழுவார் தம் துக்கம்; அசலார்க்கு அல்ல.

அழுவார் அற்ற பிணமும் சுடுவார் அற்ற சுடலையும்.

(பி-ம்.) ஆற்றுவார் அற்ற.

அழையாத வீட்டில் நாய்போல நுழையாதே.

அழையாத வீட்டில் நுழையாத விருந்து.