பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

69


அறுபத் தெட்டுக்கு ஓர் அம்பலம்.

அறுபதாம் கலக்கம்.

(அறுபது-அறுபது பிராயம்.)

அறுபது அடிக் கம்பம் ஏறினாலும் கீழே வந்துதான் யாசகம் வாங்கவேண்டும்.

(பி-ம்.) அடியில் இறங்கித்தான் பிச்சை எடுக்க வேண்டும்.

அறுபதுக்கு அப்புறம் பொறுபொறுப்பு.

அறுபதுக்கு அறுபது சென்றால் வீட்டுக்கு நாய் வேண்டாம். 1585

(யாழ்ப்பாண வழக்கு.)

அறுபதுக்கு மேல் அடித்ததாம் யோகம்.

அறுபதுக்கு மேல் அறிவுக் கலக்கம்.

(பி-ம்.) கிறுகிறுப்பு.

அறுபது நாழிகையும் பாடுபட்டும் அரை வயிற்றுக்கு அன்னம் இல்லை.

அறுபது நாளைக்கு எழுபது கதை.

(பி-ம்.) இருபது கதை.

அறுபது வயது சென்றால் அவன் வீட்டுக்கு நாய் வேண்டாம். 1590

அறுவடைக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண் சாதி.

(பி-ம்.) நான்கு.

அறுவாய்க்கு வாய்பெரிது; அரிசிக்குக் கொதி பெரிது.

அறைக் கீரைப் புழுத் தின்னாதவனும் அவிசாரி கையில் சோறு உண்ணாதவனும் இல்லை.

(பி-ம்.) விலைமாது கையில்.

அறைக்குள் நடந்தது அம்பலத்தில் வந்து விட்டது.

(பிள்ளை.)

அறை காத்தான் பெண்டு இழந்தான்; அங்கேயும் ஒரு கை தூக்கி விட்டான். 1595

அறை காத்தான் பெண்டு இழந்தான்; ஆறு காதம் சுமந்தும் செத்தான்.

அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?

அறையில் இருந்த பேர்களை அம்பலம் ஏற்றுகிற புரட்டன்.

(பி-ம்.) மிரட்டன்.