பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

91


ஆண்டி அன்னத்துக்கு அழுகிறான்; அவன் நாய் அப்பத்துக்கு அழுகிறது.

ஆண்டி ஆனைமேல் ஏறிவர நினைத்தது போல.

ஆண்டி எப்போது சாவான்? மடம் எப்போது ஒழியும்?

ஆண்டிக்கு அரண்மனை இருந்தால் என்ன? எரிந்தால் என்ன?

ஆண்டிக்கு இடுகிறாயோ? சுரைக்குடுக்கைக்கு இடுகிறாயோ? 2110

ஆண்டிக்கு அம்பாரக் கணக்கு என்ன?

(பா-ம்.) நமக்கு என்ன?

ஆண்டிக்கு அவன் பாடு; தாதனுக்குத் தன் பாடு.

(தாசனுக்கு.)

ஆண்டிக்கு இடச் சொன்னால் தாதனுக்கு இடச் சொல்வான்.

ஆண்டிக்கு இடுகிறதே பாரம்.

ஆண்டிக்கு எதற்கு அரிசி விலை? 2115

ஆண்டிக்கு எதற்கையா ஆனை?

ஆண்டிக்கு எந்த மடம் சொந்தம்?

ஆண்டிக்கு என்ன பித்து? கந்தல் பித்து.

ஆண்டிக்கு ஏன் அம்பாரக் கணக்கு?

ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ? அவன் சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ? 2120

ஆண்டிக்குப் பிச்சையா? அவன் குடுவைக்குப் பிச்சையா?

ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு அதுவும் இல்லை.

(பா-ம்.) பார்பபானுக்கு அதுவும் இல்லை.

ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதும் நாய் போர்வை வாங்கியதும் போல.

ஆண்டி கிடக்கிறான் அறையிலே; அவன் சடை கிடக்கிறது தெருவிலே.

(பா-ம்.) அவன் தோண்டி கிடக்கிறது தெருவிலே.

ஆண்டி கிடப்பான் அறையிலே; கந்தை கிடக்கும் வெளியிலே. 2125

ஆண்டி கிடப்பான் மடத்திலே; சோளி கிடக்கும் தெருவிலே.

(சோளி - பை.)

ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.

ஆண்டி கையில் அகப்பட்ட குரங்குபோல் அலைதல்.