பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தமிழ்ப் பழமொழிகள்


கொடுத்துப் பொல்லாப்பு ஆகிறதை விடக் கொடுக்காமல் இருக்கிறது நலம்.

கொடுத்தும் அறியான்; கொடுப்பவர்களைக் கண்டும் அறியான். 9720


கொடுத்தும் கொல்லை வழியாய்ப் போகிறதா?

கொடுத்து வாங்கினாயோ? கொன்று வாங்கினாயோ?

கொடுத்து வைத்தது போலக் கிடைக்கும்.

கொடுப்பது உழக்குப் பால்; உதைப்பது பல்லுப் போக.

கொடுப்பதைக் கெடுப்பாரைத் தெய்வமே கெடுக்கும். 9725


கொடுப்பதைத் தடுப்பவன் உடுப்பதும் இழப்பான்.

கொடுப்பதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுந்தானாம்.

கொடுப்பார் பிச்சையைக் கெடுப்பார் கெடுக்கிறது.

(கெடுவார் கெடுப்பார்.)

கொடுப்பாரைத் தடுக்காதே.

கொடும்பாவி ஆனாலும் கொண்ட மாமியார் வேண்டும். 9730


கொடும்பாவி சாகாளா? கோடை மழை பெய்யாதா?

கொடுமை அற்றவன் கடுமை அற்றவன்.

கொடுமை, கொடுமை என்று கோயிலுக்குப் போனேன்; அங்கே இரண்டு கொடுமை ஆடிக்கொண்டு வந்தது.

கொடுமை சுடப்பட்ட செல்வம் பசுங்கலத்தில் பால் கவிழ்ந்தது.

(கலந்தது.)

கொடுமையான அரசன்கீழ் இருப்பதைக் காட்டிலும் கடுமையான புலியின் கீழ் இருப்பது நன்று. 9735


கொடைக்குக் கர்ணன்; படைக்குத் துரியோதனன்.

கொடைக்குக் குமணன்; சத்தியத்துக்கு அரிச்சந்திரன்.

கொடையிலும் ஒருத்தன்; படையிலும் ஒருத்தன்.

(கொடைக்கும். படைக்கும்.)

கொண்ட இடத்திலே கொடுத்தாலும் கண்ட இடத்திலே கொடுக்காதே.

கொண்ட கடையிலா விற்கிறது? 9740


கொண்ட கணவனிடத்திலே இரண்டகமா?

கொண்ட கொண்ட கோலம் எல்லாம் குந்தி பெற்ற மக்களுக்கு.