பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

67


கல்லிலே வெட்டி நாட்டினது போல.

கல்லின்மேல் இட்ட அம்புகளைப் போல.

கல்லின்மேல் இட்ட கலம் 7160


கல்லினுள் தேரையையும் முட்டைக்குள் குஞ்சையும் ஊட்டி வளர்ப்பது யார்?

கல்லுக் கிணற்றுக்கு ஏற்ற இருப்புத் தோண்டி.

கல்லுக்கும் முள்ளுக்கும் அசையாது வெள்ளிக்கிழமைப் பிள்ளையார்.

கல்லுக்குள் இருக்கிற தேரையையும் முட்டைக்குள் இருக்கிற குஞ்சையும் ஊட்டி வளர்க்கிறவர் யார்?

கல்லுக்குள் தேரையைக் காப்பாற்றவில்லையா? 7165


கல்லுப் பிள்ளையாரைக் கடித்தால் பல்லுப் போம்.

கல்லும் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு.

கல்லும் கரைய மண்ணும் உருக அழுதாள்.

கல்லும் கரையுமே, கற்றூணும் இற்றுப் போமே!

கல்லும் காவேரியும் உள்ள மட்டும் வாழ்க! 7170


கல்லும் தேங்காயும் சந்தித்தது போலப் பேசுகிறான்.

கல்லுளிச் சித்தன் போன வழி காடு மேடெல்லாம் தவிடுபொடி.

கல்லுளி மங்கா, கதவைத் திற.

கல்லே தலையணை, கானலே பஞ்சு மெத்தை.

கல்லை ஆகிலும் கரைக்கலாம்; கல்மனத்தைக் கரைக்கலாகாது. 7175

(மூர்க்கன் மனத்தை.)


கல்லை இடறினாலும் கணக்கனை இடறாதே.

(கல்லோடு, கணக்கனோடு.)

கல்லை எதிர்த்தாலும் கணக்கனை எதிர்க்காதே.

கல்லைக் கட்டிக் கொண்டு கசத்தில் இறங்குவது போல.

கல்லைக் கட்டி முத்தம் கொடுத்தாற்போல.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம். 7180


கல்லைக் கிள்ளிக் கை இழந்தது போலாம்.

கல்லைக் கிள்ளினால் கை நோகும்.

கல்லைக் குத்துவானேன்? கைநோகுதென்று அழுவானேன்?