பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தமிழ்ப் பழமொழிகள்



பங்காளத்து நாய் சிங்காசனம் ஏறினதென்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.

(பங்களா நாய்.)

பங்காளிக்குப் பல்லிலே விஷம்.

பங்காளிச் சண்டை பொங்கலுக்கு இருக்காது.

பங்காளியையும் பனங்காயையும் பதம்பார்த்து வெட்ட வேண்டும்.

பங்காளியோ, பகையாளியோ? 15030


பங்காளி வீடு வேகிறது; சுக்கான் கொண்டு தண்ணீர் விடு.

பங்கில் பாதி பரத்வாஜம்.

(பரத்வாஜ கோத்திரம்.)

பங்கு இட்டவளுக்குப் பானைதான் மிச்சம்.

பங்கு இடுபவன் பந்து ஆனால் பந்தியில் எங்கே இருந்தால் என்ன?

பங்கு இல்லாப் பங்கை விழுந்து அள்ளலாமா? 15035


பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.

பங்குனி சித்திரையில் பகல் வழி நடப்பது போல.

பங்குனிப் பனி பால் வார்த்து முழுகியது போல.

பங்குனி மழை பத்துக்கும் நஷ்டம்.

(சேதம்.)

பங்குனி மழை பதம் கொடுக்கும். 15040


பங்குனி மழை பல விதத்திலும் சேதம்.

பங்குனி மழையால் பத்தெட்டும் சேதம்.

பங்குனி மாதம் பகல் வழி நடந்தவன் பெரும்பாவி.

(நடப்பது தோஷம்; நடந்தவன் படுபாவி.)

பங்குனி மாதம் பகல் வழி நடந்தவனைப் பார்த்திருப்பவனும் பாவி.

(யாழ்ப்பாண வழக்கு.)

பங்குனி மாதம் பத்துக்கும் நஷ்டம். 15045


பங்குனி மாதம் பதர்கொள்.

பங்குனி மாதம் பந்தலைத் தேடு.

பங்கூர் ஆண்டி கட்டின மடம்.

பச்சரிசியும் பறங்கிக் காயும் உடம்புக்கு ஆகா.

பச்சிலைத் தோசை அறியாத பன்னாடை இட்டலியைப் பார்த்ததும் எடுத்து எடுத்துப் பார்த்ததாம். 15050


பச்சிலையும் கிள்ளப் படுமோ பராபரமே.

பச்சை உடம்பிலே போடாத மருந்தும் மருந்தா? பந்தியிலே வைக்காத சீரும் சீரா?