பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தமிழ்ப் பழமொழிகள்


தனக்குத் தங்கையும் தம்பிக்குப் பெண்டாட்டியும்.

தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது; ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும். 12310


தனக்குத் தவிடு குத்த மாட்டாள்; அயலாருக்கு இறுங்கு இடிப்பாள்.

(இறுங்கு-ஒருவகைச் சோளம்.)

தனக்குத் தனக்கு என்றால் தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும்.

(தாய்ச்சீலை-கௌபீனம்.)

தனக்குத் தனக்கு என்றால் பிடுங்கும் களை வெட்டும்.

(ஒருகை பிடுங்கும், மற்றொரு கை களை வெட்டும்.)

தனக்குத் தாறும் பிறைக்குத் தூணும்.

தனக்குத் தானே கனியாத பழத்தைத் தடி கொண்டு அடித்தால் கனியுமா? 12315


தனக்கும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டான்.

தனக்குப் பிறந்த பிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம்; ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கல்யாணம் செய்கிறானாம்.

தனக்குப்பின் தானம்.

தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன? கவிழ்ந்து என்ன?

(நிமிர்ந்து என்ன?)

தனக்குப் பின்னால் வாழ்ந்தால் என்ன? கெட்டால் என்ன? 12320


தனக்குப் பெரியாரைத் தடிகொண்டு அடிக்கிறது.

தனக்குப் போகத் தானம்.

தனக்கும் உயர்ந்த குலத்தில் பெண்ணைக் கொடு; தன்னிலும் குறைந்த இடத்தில பெண்ணை எடு.

தனக்கு மிஞ்சித்தான் பரோபகாரம்.

தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை வேண்டும். 12325


தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.

தனக்கே தகராறாம்; தம்பிக்குப் பழையதாம்.

தனக்கே தாளமாம்; தம்பிக்குப் பலகாரமாம்.

தனத்தால் இனம் ஆகும்; பணத்தால் ஜனம் ஆகும்.

தனம் இரட்டிப்பு; தானியம் முத்திப்பு. 12330


தனிக் காட்டு ராஜா.

தனி மரம் தோப்பு ஆகுமா?

தனி வழி போகாதே; அரவத்தொடு ஆடாதே.

தனிவழியே போனவளைத் தாரம் என்று எண்ணாதே.