பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தமிழ்ப் பழமொழிகள்



வீட்டுக்குள் விடிந்தால்தான் வெளியிலும் விடியும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

வீட்டுக் கொடியை வெட்டினால் வீட்டுப் பெண் வேட்டகத்தில் தங்காது.

வீட்டுச் செல்வம் மாடு; தோட்டச் செல்வம் முருங்கை.

வீட்டுச் சோற்றைத் தின்று ஊருக்கு உதவினான். 20535


வீட்டுச் சோற்றைக் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்?

வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?

வீட்டுச் சோறும் வேண்டாம்; அடுப்பாண்டியும் வேண்டாம்.

(நாஞ்சில் நாட்டு வழக்கு. வீட்டுச் சாறும்.)

வீட்டுத் தெய்வத்தை விளக்குமாற்றால் அடித்துக் காட்டுத் தெய்வத்தைக் கை எடுத்தக் கும்பிட்டாளாம்.

வீட்டு நாய்ப் பாசம் ஒரு நாய்க்கு ஏது? 20540

(வேறு நாய்க்கு.)


வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அது காட்டுப் பாம்பு ஆகும்.

வீட்டுப் பிள்ளையும் வெளிப் பிள்ளையும் வித்தியாசம் அறியா.

வீட்டுப் புலி. வெளிப் பூனை.

வீட்டுப் பெண்சாதி வேம்பு; நாட்டுப் பெண்சாதி கரும்பு.

வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் கூடி உலாவுகின்றன. 20545


வீட்டு வேலை வெளி வேலை பார்த்துக் காட்டு வேலைக்குக் கட்டோடு போகலாம்.

வீட்டை எல்லாம் வெல்லத்துக்கு மாற்றினானாம்.

வீட்டை ஏன் இடித்தாய் மூட்டைப் பூச்சிக்குப் பயந்து.

வீட்டைக் கட்டி ஓட்டைப் போடு.

வீட்டைக் கட்டிக் குரங்கைக் குடி வைத்தது போல. 20550


வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைச் செய்து பார்.

வீட்டைக் கட்டு; அல்லது காட்டை அழி.

வீட்டைக் கட்டுமுன் கிணற்றைத் தோண்ட வேண்டும்.

வீட்டைக் காக்கம் நாயும் நாட்டைக் காக்கும் சேவகனும் ஒன்றாகி விடுவார்களா?

வீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நாயும் வீண் போகா 20555


வீட்டைக் காத்து அருள்; பாட்டைப் பார்த்து அருள்.

வீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா?