பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

97


மேய்த்தால் மதனியை மேய்ப்பேன்; இல்லையென்றால் பரதேசம் போவேன்,

(மைத்துணியை.)

மேய்த்துத் தெளியாத மாடு தேய்த்துத் தெளியும்.

மேய்ப்பவன் போனால் ஆடு தொழுவத்தில் இருக்குமா?

(மேய்ப்பனார்.)

மேய்ப்பான் கண்ணிலும் உடையவன் பிடரி நலம்.

மேய்ப்புப் பாதி; தேய்ப்புப் பாதி. 19185


மேயப் போகிற மாட்டுக்குக் கொம்பிலே புல் கட்ட முடியுமா?

(புல் கட்டிக் கொண்டா போகிறது?)

மேயப் போகிற மாடு கொம்பிலே புல்லைக் கட்டிக் கொண்டு போகிறதா?

மேருவை அடைந்த காகமும் அமிருதம் உண்ணும்.

மேருவைச் சார்ந்த காகமும் பொன் நிறமாம்.

(அடைந்த.)

மேல் உதடு இல்லாதவன் வேய்ங்குழலுக்கு அச்சாரம் கேட்டது போல். 19190


மேல் காணும் இனிமையால் காலுக்கு நோய் காட்டில் கலுழ்ந்தான்.

மேல் நோக்கிய மரமும் கீழ் நோக்கிய கிணறும்.

மேல் மினுக்கியைக் கட்டினவனும் மேட்டுப் புன்செய்யை உழுதவனும் கெட்டான்.

மேலே பார்த்தால் சிங்காரம்; உள்ளே பார்த்தால் ஓக்காளம்.

மேலே பார்த்தால் மினுக்குத்தான்; உள்ளே பார்த்தால் தொளுக்குத்தான். 19195


மேலைக்கு இருப்பாரும் இல்லை; கூலிக்கு அறுப்பாரும் இல்லை.

(இறுப்பாரும்.)

மேலைக்கு உழுவார் கூழுக்கு அழுவார்.

(கூலிக்கு.)

மேலைக்குத் தாலி கட்டுகிறேன்; கழுத்தே சுகமாயிரு என்றால் போல.

(மேலைக்கு வாழ்க்கைப்படுகிறேன்.)

மேலோர் அறிவு கீழோர்க்குவருமா?

மேழிக்கு உடையவன் வேளாளனே 19200


மேழிச் செல்வம் கோழை படாது.

(படுமா?)

மேளகாரனுக்கு ஏற்ற மத்தளக் கட்டை.