பக்கம்:தமிழ்மாலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

“அடிகள் பாடம் நடத்துவதை மாணவர் பேருவகையோடு கேட்டு மகிழ்வர்” என்றார் திரு எஃச். வையாபுரிப் பிள்ளையவர்கள். இவர் தமிழ்ப் பேரகராதித் தலைமையாசிரியர்.

தவத்திரு ஞானியாரடிகள், “சைவத் தலைமைக்குத் தகுதியானவர் மறைமலையடிகளாரே” என்றார். இவர் சிவத்திருமடத்துத் தனித்தன்மைத் தலைவர்.

இவ்வாறு பாராட்டிய பலமுனைப் பெருமக்கள் பாராட்டுரைகள்

அடிகளாரை,

நெறியான வாழ்வினராக,

மும்மொழி வல்லுநராக,

சிறந்த பேச்சாளராக,

தேர்ந்த நூலாசிரியராக,

ஆர்ந்த சைவச் செம்மலாக,

தனித்தமிழ்த் தந்தையாக,

தெளிந்த ஆய்வாளராக,

தெரிந்தெண்ணிச் செய்பவராக,

தமிழன்இன உணர்வினராக,

தன்மானத் தகவாளராக,

தன்மதிப்பு உணர்ந்தவராக

இந்தி எதிர்ப்பாளராக,

தமிழ் மரபின் தாளாளராக

மேலும் பலவாறாக அடுக்கும் அளவிற்குக் கருத்துரைகளைத் தருகின்றன. இவ்வாறு அடிகளாரின் தகவுகள் விரிந்தாலும் இவ்விரிவைத் தொகுத்து வகைப்படுத்தினால் முன்னே கண்ட தமிழின ஊற்றம், தமிழ் முத்திரை, சைவப் பகுத்தறிவு முழக்கம் என்னும் மூன்றின் அடித்தளத்தில் திகழ்வதைக் காணலாம்.

இத்துணையளவில் உணர்வும் அறிவும் திறனும் கொண்டவரை அறிமுகம் கொள்ளும் எவரும் அவர் தம் வாழ்வியலை அறியமனம்பற்றுவர்.

குற்றாலத்தை நினைப்போர் அவ்வருவியின் குளிர்ச்சியை எண்ணி மனம் குளிர்வர்; அது தரும் உடல்நலத்தை உன்னி உடல் குளிர்வர்; அதுதரும் நீரின் சுவையை நினைந்து நா ஊறுவர். இம்மூன்று உணர்வின் உந்துதலால் அவ்வருவியின் ஊற்று எது என்றறிய ஆர்வங்கொள்வர். எங்கு தோன்றுகிறது? எவ்வாறு கூடுகிறது? எவ்வழி வருகிறது? எந்தலங்களை எவ்வாறு தொகுத்துக் கொண்டு வருகிறது? என்னும் அதன் வரலாற்று விரிவை அறிய ஆர்வங்கொள்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/12&oldid=687072" இலிருந்து மீள்விக்கப்பட்டது