பக்கம்:தமிழ்மாலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அது போன்றே மறைமலையடிகளார் என்னும் தமிழ் அருவியில் அறிவு நீராடுவோர்; உணர்வுச் சுவை கொள்வோர், நூல்நலங்கொள்வோர் அவரது வாழ்வு வரலாற்றையும் அறிய மனம் பற்றுவது இயல்பாகும்.

அடிகளார் வாழ்வு தமிழ் இழையோடிய வாழ்வு; தமிழ் தழுவிய சாயலுடையது.நாகர்பட்டின நகரத்தைச் சேர்ந்ததாக அதன் வடக்கெல்லையில் காடவர் கோன்பாடி என்றொரு பகுதி உள்ளது. பல்லவ மன்னரது ஆளுகைத் தலைவரான காடவர்கோன் கழற்சிங்கன் அரசலுவல் தொடர்பாக அங்குப் பாடி வீடமைத்துத் தங்கியமையால் காடவர்கோன் பாடி எனப் பெயர்பெற்றது. இக்காலம் அது காடம்பாடி எனப்படுகின்றது. அது அடிகளார் பிறந்த ஊர்ப்பகுதி என்பர். அஃது உண்மையன்று. உண்மையை அறிய அடிகளாரின் பெற்றோர் எவர் என்னும் விவரத்தை அறிய வேண்டும்.

காதலில் கனிந்த குழந்தை

நாகைக் காடவர் கோன்பாடியில் திரு சொக்கனாத பிள்ளை தம் மூதாதையர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் குடியால் சைவ வேளாளர்; தொழிலில் அறுவை மருத்துவர். அதன் தொடர்பில் நாகைக் கடைத்தெருவில் ஒர் அறைகொண்டு தொழில் செய்தார். செல்வராய் வளர்ந்தார். அவருக்கு நாகையிலும் ஒரு குடும்பம் அமைந்தது. அங்கு யாதவத்தெரு என்னும் கடைத்தெருவில் ஒரு பேரில்லத்தை வாங்கி அதில் தம் காதல் மனைவியுடன் வாழ்ந்தார். அவ்வம்மையார் பெயர் சின்னம்மை. அவர் சேனைக்கொண்ட செட்டியார் குடியினர்.இன்னோர் ஈன்றெடுத்த செல்வமே நம் அடிகளார். தாய் வணிகக் குடிமகள்; தந்தை வேளாளர் குடிமகன். வேளாண்மையும், தாளாண்மையும் கலந்து தோன்றிய மலையே மறைமலை.இவ்வாறு குறிப்பதில் தவறில்லை. உண்மை தன்னுருவில் வெளிப்படுத்தப்படுகிறது எனலாம்.

மகப்பேற்றிற்கு அறுபது அகவை வரை அங்காந்திருந்த திரு சொக்கலிங்கனார் சின்னம்மையுடன் திருக்கழுக்குன்றம் சென்று தங்கி அவ்விறைவனை வேண்டி ஆண்மகவைப் பெற்றார் என்பர். திருக்கழுக்குன்ற இறைவன் பெயர் வேதகிரீசர் என்னும் வேதாசலம். வேதாசலர் அருளால் திருவள்ளுவர் ஆண்டு 1845 ஆணித் திங்கள் 31-ற்கு நேரான கி.பி.1876 சூலைத் திங்கள் 15-ஆம் நாள் தோன்றிய தன் மகனுக்கு வேதாசலம் என்ற பெயரிட்டனர் பெற்றோர்.

இக்காலம் தென்னிந்தியத் திருச்சபை மேனிலைப்பள்ளியாக விளங்கும் அந்நாளைய வெசிலிமிசன் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்று ஆங்கில அறிவு பெற்றார் வேதாசலம். தன் வீட்டிற்கு எதிரில் புத்தகக் கடை வைத்திருந்த இலக்கணப்புலவர் திருவே.நாராயணசாமிபிள்ளை கடைக்குச் சென்று நூல்களைக் கண்டு நிற்கும் துடிப்பறிந்த பிள்ளையவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/13&oldid=687073" இலிருந்து மீள்விக்கப்பட்டது